"கிராமங்களில் வேகமாகப் பரவி வரும் விஷக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
"விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கல்யாணசுந்தரபுரம் கிராமத்தில் விஷக் காய்ச்சலுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். இந்தப் பகுதியில் பிளஸ் 2 மாணவர்கள் ஊசி போட்டுக்கொண்டுதான் தேர்வு எழுதச் செல்கின்றனர்.
20 நாள்களாக பரவிவரும் விஷக் காய்ச்சலுக்கு ஒரே கிராமத்தில் 5 பேர் இறந்துள்ளது வேதனையானது. இவர்கள் அருகில் உள்ள கல்லூரணி மற்றும் எம். ரெட்டிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 நாள்களாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்து ஓராண்டு ஆகிறது என்றும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பஸ் வசதி இல்லை என்றும் மக்கள் கூறுகின்றனர். ஊராட்சித் தலைவரும் அதிகாரிகளும் 100 ஓட்டுதானே இருக்கிறது என்று தங்களைப் புறக்கணித்து வருவதாக கல்யாணசுந்தரபுரம் கிராம மக்கள் கூறுகின்றனர்.
சுகாதாரத் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை இலவசங்கள் வழங்க மாற்றிவிட்டதால் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்கள் அதிகரித்து வருகின்றன. விஷக் காய்ச்சல் பரவியுள்ள கிராமங்களுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பி காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சிகிச்சை மற்றும் மருந்துகளின் நம்பகத்தன்மையை விசாரிக்க வேண்டும்" என்று பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




