மகளிர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இன்று(புதன்கிழமை) அளிக்கிறார்.
மகளிர் மசோதாவுக்கு சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மசோதாவை நிறைவேற்றினால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் அவை அறிவித்திருந்தன. இந்நிலையில் மகளிர் மசோதா மாநிலங்களவையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நிறைவேறியது.
இது குறித்து லாலு பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, "பிரதமர் மன்மோகன் சிங்கை நானும், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாம். ஆனால் எங்கள் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் புதன்கிழமை வழங்கவுள்ளேன். அவையில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களை மார்ஷல்களைக் கொண்டு வெளியேற்றியது இதுவரை நிகழ்ந்திராத செயலாகும். நாட்டில் சர்வாதிகாரத்தையும், எமர்ஜென்சியையும் கொண்டு வருவதற்கான துவக்கம் இது. மக்களவையை போலீஸ் நிலையமாக மாற்றிவிட்டனர்" என்று அவர் கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




