சென்னை: பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அவசரகதியில் புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவை செயல்பட்டு வரும் பகுதியிலிருந்து மத்திய அரசோ அல்லது பாதுகாப்புத் துறையோ, அரசை வெளியேற்ற நோட்டீசு பிறப்பிக்காத நிலையில், புதிய இடத்துக்குச் செல்ல இத்தனை அவசரம் காட்டத் தேவையில்லை.
மேலும் புதிய கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. மின்சாரம், கழிவுநீர் அகற்றம் ஆகியவற்றுக்கான இணைப்பு கிடைப்பதற்கு முன்பு, கட்டிடம் முழுமை அடைந்ததற்கான சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். ஆனால் இவையெல்லாம் முடிக்கப்படாத நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மாநகர அமைப்புச் சட்டங்களை அரசு அதிகாரிகள் ஒழுங்காகப் பின்பற்றவில்லை என்பதால் முழுவதும் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில் அரசு செயல்பட அனுமதிக்கக் கூடாது. அத்தகைய பூர்த்தியடையாத கட்டிடத்தை பிரதமர் தொடக்கி வைக்க இருக்கிறார். அங்கு பணியாற்றுகிறவர்கள், பார்வையாளர்கள் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




