சென்னை: கடந்த 19 ஆண்டுகளாக நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி விண்ணப்பித்திருந்தார். அதனடிப்படையில், ஆலோசனை குழு கூடி நளினியின் விண்ணப்பத்தை ஆய்வு செய்தது. இறுதியில் நளினியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நளினி மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், தனது விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்காக கூட்டப்பட்ட ஆலோசனை குழு முறையாக கூடவில்லை.எனவே, முறைப்படி ஆலோசனைக் குழுவை கூட்டி முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.நளினியின் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், முறைப்படி ஆலோசனை குழுவைக் கூட்டுமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஆலோசனை குழு கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் கூட்டப்பட்டது. இக்குழு நளினியின் கோரிக்கையை பற்றிய அறிக்கையை தயாரித்தது.
இந்த நிலையில், நளினியின் விடுதலை தொடர்பான முடிவெடுப்பதற்கு முன்பு இது தொடர்பாக ஏற்கனவே தான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் சுப்பிரமணியசாமி கோரிக்கை வைத்தார். தனது விடுதலை தொடர்பாக நளினியும் முறையீடு செய்துள்ளார். இதுதவிர, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கும் நளினி தந்தி மூலம் விண்ணப்பித்துள்ளார்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசீதரன் முன்னிலையில் விசாரிக்கப்படுகின்றன. நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு சிறப்பு பிளீடர் தேசிங்கு ஆஜரானார்.அவர் தனது வாதத்தில், ஆலோசனை குழுவின் அறிக்கை இன்று அரசுக்கு அனுப்பப்பட்டட்டுள்ளது.நளினியின் விடுதலை தொடர்பாக அந்த அறிக்கை அடிப்படையில் அரசு ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது. எனவே, அரசுக்கு 2 வாரகால அவகாசம் தரவேண்டும்' என்று குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள், `அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆலோசனைக்குழு அறிக்கையை கோர்ட்டில் இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்' என்றும் கூறினர்.
பின்னர் வழக்குரைஞர் ஜெனரல், பி.எஸ்.ராமன் ஆஜராகி`ஆலோசனை குழு அறிக்கைமீது அரசு பரிசீலனை செய்ய வேண்டி இருப்பதால் நீதிபதிகள் பார்வைக்காக `சீல்' வைத்த கவரோடு அந்த அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




