செ ன் னை: அடையாறு டீச்சர்ஸ் காலனியில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வரும் சதாசிவம், பூபதி, நந்தகோபால் ஆகிய மூவரையும் மர்மக்கும்பல் காரில் கடத்திச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை இம்முவரும் சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு தங்களுடைய காரில் புறப்பட்டனர்.
பார்க்கிங்கிலிருந்து காரை எடுக்கும் போது அருகில் நின்றிருந்த இன்னொரு கார் மீது இவர்களுடைய கார் மோதிவிட்டது. இதையொட்டி அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் சதாசிவம், பூபதி, நந்தகோபால் ஆகியோர் தங்களுடைய காரில் புறப்பட்டு போய்விட்டனர்.
சென்னை: அடையாறு இந்திராநகர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக காத்திருந்தபோது மாருதி கார் ஒன்றில் 4 பேர் பயங்கர ஆயுதங்களோடு வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சதாசிவத்தின் தோள்பட்டையில் அரிவாளால் வெட்டினார்கள். அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்தார். பின்னர் அந்த கும்பல் பூபதியையும், நந்தகோபாலையும் அவர்கள் வந்த காரிலேயே கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுவிட்டனர்.
சதாசிவம் இதுகுறித்து போலீஸுக்குத் தகவல் கொடுத்துவிட்டு,அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கடத்தப்பட்ட பூபதி, நந்தகோபால் ஆகியோர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை.
பூபதி, நந்தகோபால் ஆகியோரின் செல்போன்களைக் கண்காணித்தபோது, நேற்று காலையில் அவர்கள் புதுச்சேரியில் இருப்பது தெரிய வந்தது. ஆனால் செல்போனில் அவர்களோடு பேச முடியவில்லை. இதனிடையே, அவர்களை மீட்க சென்னையிலிருந்து தனிப்படை போலீசார் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.புதுச்சேரியில் அவர்களை பல இடங்களில் தேடியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று பிற்பகல் பூபதி, நந்தகோபால் ஆகிய இருவரையும் கடத்தல் கும்பல் மதுராந்தகம் அருகே அவர்களுடைய காரோடு விட்டுவிட்டு செல்போன்களையும், அவர்கள் வைத்திருந்த பணத்தையும் பறித்துச் சென்றனர். அவர்களை தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்டு சென்னை அழைத்து வந்தனர்.
கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




