சென்னை: முதல்வர் கருணாநிதியின் சாதனைக்காக அவருக்கு உருவச்சிலை வைப்பதுகூட வரவேற்கத்தக்க செயலாகும். அதனை காங்கிரஸ் முழுமனதுடன் வாழ்த்தி வரவேற்கும்'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"கருணாநிதியின் சாதனைக்காக அவருக்கு உருவச் சிலை வைப்பதுகூட வரவேற்கத்தக்க செயலாகும். அதனை காங்கிரஸ் கட்சி வாழ்த்தி வரவேற்கும். புதிய சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் வைப்பது சட்டப் பேரவை மரபுகளுக்கு முரணானது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ள கருத்து ஏற்கத்தக்கதல்ல. சரியானதும் அல்ல.
பொதுவாக மரபுகள் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அந்தந்த காலங்கள், நிகழ்வுகள், அனுபவங்கள் அடிப்படையில் புதிது புதிதாக மரபுகள் உருவாக்கப்படுகின்றன. முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் 50 ஆண்டுகால அரசியல் வரலாறு என போற்றப்படுபவர். 5 வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்று புதிய சாதனை படைத்தவர்.
மக்களுக்காக புதிய திட்டங்களையும், சட்டங்களையும் உருவாக்கியவர். ஒவ்வாத சில பழைய மரபுகளை ஒதுக்கிவிட்டு புதிய மரபுகளை உருவாக்கியவர். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு இடமின்றி விடுதலைப் போராட்ட தியாகிகளையும், தேசிய தலைவர்களையும் போற்றி அவர்களுக்கு பெருமை சேர்த்தவர்.
தமிழகம், தமிழர்கள், தமிழ் மொழி உயர்வுக்கு தொடர்ந்து தொய்வின்றி 86 வயதிலும் உழைத்து வருபவர். கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவராலும் போற்றப்படும் பன்முக நாயகர். எனவே அவரது உருவப் படத்தை வைக்க புதிய மரபை உருவாக்கலாம். ஏற்கெனவே கருணாநிதியின் படத்தை தங்களது இதயங்களில் ஏற்றுள்ள உலகத் தமிழர்கள் இதனையும் மகிழ்ச்சியுடன் ஏற்பார்கள் என்பது நிச்சயம்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




