சான்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமியும் தாக்கியது. இதில் 900-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இப்பூகம்பத்தின் ஆஃப்டர் ஷாக் எனப்படும் தொடர் அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறன.
இந்நிலையில் அந்த நாட்டில் புதிய அதிபராக செபாஸ்டின் பினரா தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி ஏற்பு நிகழ்சி பிரைசோ நகரில் நடந்து கொண்டிருந்தது. அச்சமயம் மீண்டும் திடீரென பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் பதவி ஏற்பு விழா மண்டபமும் குலுங்கியது. உள்ளே அவசர அவசரமாக பதவி ஏற்பு விழாவை முடித்து கொண்டு அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு விரைந்தனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேலில் 6.9 புள்ளியாக இருந்தது. அப்பகுதி முழுவதும் பூகம்பத்தால் குலுங்கியது. எனவே மக்கள் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினார்கள். நிலநடுக்க மையப் புள்ளி கடல் அருகே இருந்த்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் கடலோர பகுதி மக்கள் பாது காப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால் சுனாமி எதுவும் தாக்கவில்லை.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடத்தில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சிறிய அளவில் இருந்தாலும் அதை தொடர்ந்து 12 தடவைக்கும் மேல் லேசான அதிர்வுகள் ஏற்பட்டன. கடந்த 27-ந் தேதி பூகம்பத்துக்கு பிறகு மட்டும் இதுவரை 250 தடவை நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது. எனவே சிலி நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர். நேற்று ஏற்பட்ட பூகம்ப பாதிப்பு பற்றி இதுவரை தகவல் இல்லை.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




