புதுடெல்லி: ""பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்யும் முன், அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னரே மசோதா தாக்கல் செய்யப்படும்,'' என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று உறுதி அளித்தார். இதன் மூலம் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா எதிர்ப்பாளர்களுக்கு மத்திய அரசு பணிந்தது.
லோக்சபாவில் தாக்கல் செய்வதை ஆறப் போடவும் தீர்மானித்து உள்ளது. இதையடுத்து, கடந்த மூன்று நாள் அமளிக்கு பின், வழக்கமான பாராளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்தன. இந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தற்போதைய நிலையில், லோக்சபாவில் நிறைவேற்ற முலாயம், லாலு பிரசாத், சரத் யாதவ் போன்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று காலையில் லோக்சபா கூடியதும் இப்பிரச்னை கிளம்பியது. உடன், அவர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதலில் பேசிய முலாயம் சிங், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூக பெண்களுக்கு இந்த மசோதாவால் எந்த பலனும் இல்லை,'' என்றார்.
சரத் யாதவ் பேசும் போது, ""ஏழை, எளிய சாதாரண பெண்களுக்கு மசோதாவால் பயனில்லை. அதனால், உள்ஒதுக்கீடு அவசியமான ஒன்று. அதை தராதவரையில் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்,'' என்றார். லாலுபிரசாத் பேசும் போது, "" உண்மையில் காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளிலுமே எங்களுக்கு ஆதரவு உள்ளது. நிறைய எம்.பி.,க்கள் வந்து எங்களை பார்த்து ஆதரவு தருகின்றனர். ஏற்கனவே, பா.ஜ.,வில் பிளவு வந்துவிட்டது. அது காங்கிரசிலும் வராது என்று உத்திரவாதம் தர இயலாது என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




