இலங்கையில் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான சண்டையில் கால்களை இழந்த ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு செயற்கைக் கால்களை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த உள்நாட்டு சண்டை முடிவுக்கு வந்ததை அடுத்து, இந்தச் சண்டையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாய் இந்தச் சண்டையில் தங்கள் கால்களை இழந்த ஆயிரம் தமிழர்களுக்கு, செயற்கை கால்களை வழங்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டு சண்டையில், ஏராளமான தமிழர்கள் காயமடைந்தனர். கண்ணி வெடி மற்றும் வெடி குண்டு தாக்குதல் போன்ற சம்பவங்களால் பலர் கால்களை இழந்தனர். இவர்களுக்கு, ஜெய்ப்பூரில் தயாரிக்கப்பட்ட செயற்கை கால்களை இந்திய அரசு வழங்கும்.
பகவான் மகாவீர் விக்லங் சமிதி என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம், இந்த செயற்கைக் கால்கள், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்படுகின்றன. மொத்தம் 1,000 செயற்கை கால்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக் கிழமையன்று முதல் கட்டமாக வவுனியாவில் செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




