மகளிர் இட ஒதுக்கீட்டு முன்வடிவை ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும் அரிய வகையில் நிறைவேற்றிக் கொடுத்த ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளையும் நான் பாராட்டியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாடாளுமன்றத்திலும், சட்டமன்றப் பேரவைகளிலும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு சட்ட முன்வடிவு, மாநிலங்களவையில் சுமார் 14 ஆண்டுகளுக்குப்பிறகு நிறைவேறியுள்ளது. வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த சட்ட முன்வடிவை ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும் அரிய வகையில் நிறைவேற்றிக் கொடுத்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளையும் நான் பாராட்டியே ஆக வேண்டும்.
1960களில் இந்திரா காந்தியை இந்தியப் பிரதமராக்கி நாம் பெருமைப்படுத்தினோம். இன்றைக்கும் ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்.
நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது, மகளிருக்கு கிடைக்க வேண்டிய பங்கினை உறுதி செய்ய பாடுபட்டேன். தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஏற்பட நான் முக்கிய காரணமாக இருந்தேன். தாயின் பெயரையும் தலைப்பெழுத்தாக (இனிஷியல்) வைத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டேன்.
ஆணாதிக்கம் நிறைந்த சமூக அரசியல் அமைப்பில், மகளிருக்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வது முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அ.தி.மு.க. தொடர்ந்து ஆதரித்து வருகிறது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாகிய பிறகு, மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பொறுப்புகளை ஏற்கக் கூடிய மனோதிடமும், திறமையும் பெண்களுக்கு அவசியம். எனவே, எதிர்காலத்தில் பெண்கள் அரசியலில் ஆக்கப்பூர்வமான பங்கினை வகிக்கும் வகையில் தங்களை வளர்த்துக் கொள்ளவும், பண்படுத்திக் கொள்ளவும், பெண்களுக்கு பயிற்சி அளிக்க அ.தி.மு.க. தேவையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
மகளிருக்கு அதிகாரம் அளித்தல், பாலின சமத்துவம், வலுவான மற்றும் நீள்மீட்சி இந்தியா ஆகியன அ.தி.மு.க.வின் நோக்கங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




