பென்னாகரம் இடைத்தேர்தல் பணிக்காக ஆளுங்கட்சியான திமுக மற்றும் முக்கிய எதிர்கட்சியான அதிமுக கட்சி பிரமுகர்கள் குவியத் தொடங்கியுள்ளதால் அங்குள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டார கிராமங்களில் வீடுகளை 15 நாட்களுக்கு வாடகைக்கு விட்டும் சம்பாதிக்கிறார்கள்.
போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு மற்றும் பட்டுவாடா பணிக்களுக்காக நெல்லை, குமரி,தூத்துக்குடி மாவட்ட முக்கிய பொறுப்பாளர்கள், ஓன்றிய, நகர, தொகுதி பிரமுகர்கள் பென்னாகரத்தில் முகாமிட்டுள்ளனர்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலில் திமுக,அதிமுக,பாமக,தேமுதிக வேட்பாளர்களை நிறுத்தி 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக-அதிமுக, பாமக-தேமுதிக, திமுக-பாமக என மும்முனைப் பிரச்சாரத்தால் பென்னாகரம் வாக்களர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள வீடு புரோக்கர்கள், வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோர்க்கு பணமழை கொட்டுவதாக அங்கு முகாமிட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
திருமங்கலம்,திருச்செந்தூரைத் தொடர்ந்து பென்னாகரத்திலும் கரண்ஸி மழை பொழிவதால் சுயேட்சைகள் திணறிப்போயுள்ளதை காணமுடிகிறது. வாக்குகள் பிரிவதைத் தடுக்க கனிசமான பகுதிவாரி ஜாதி ஓட்டுக்களைக் கொண்டிருக்கும் சுயேட்சைகளுக்கு விலை பேசும் வேலையும் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது.
பென்னாகரத்தில் கொட்டும் இடைத்தேர்தல் வருமானங்களைக் கேள்விபட்டு அக்கம்பக்க தொகுதி மக்கள் தங்கள் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வராதா என்று ஏக்கப்பெருமூச்சு விடுகின்றனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




