நேற்று மக்களவையில் பட்ஜெட் தொடர்பாக 2 நாட்கள் நடைபெற்ற பொது விவாதத்திற்கு பதில் அளித்து நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பேசும்போது "பெட்ரோல்-டீசல் விலை உயர்வு வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லைநிதி நிலைமை காரணமாக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்காக தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானதுதான் என்றாலும், நாட்டின் நிதி நிலைமை காரணமாக, விலை உயர்வை திரும்பப்பெற முடியாத நிலை இருப்பதாக விளக்கம் அளித்த பிரணாப் முகர்ஜி, அதற்காக தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்றும் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பிரணாப் முகர்ஜி தனது பதில் உரையில் "நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் கோடைகால சாகுபடி உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், கடந்த 5 மாதங்களாக தொழில் துறையில் அடைந்துள்ள இரட்டை இலக்க வளர்ச்சி காரணமாக நமது பொருளாதார நிலைமை மேம்பட்டு வருகிறது.
பட்ஜெட்டில் உற்பத்தி வரி 2% அதிகரிக்கப்பட்டு இருப்பது, பணவீக்க பிரச்சினையில் சில சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே வரிவிதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன''.என்று பேசினார்.
பிரணாப் முகர்ஜி பதில் அளித்து பேசியதும் அவரிடம் சென்ற முன்னாள் நிதி மந்திரியும் பா.ஜனதா தலைவருமான யஷ்வந்த் சின்கா,டீசல் விலை உயர்வை மட்டுமாவது மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது

| < முந்தையது | அடுத்தது > |
|---|




