பென்னாகரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம், இதர முறைகேடுகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பென்னாகரம் இடைத்தேர்தலில், புதிய வரலாறு படைக்கும் வகையில் பணம் வெள்ளம் போல் பாய்ந்து கொண்டிருக்கிறது. வாக்கிற்கு 1000 ரூபாய்; குடும்பத்திற்கு 5000 ரூபாய் என்று பணம் வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பணத்தை திணித்துவிட்டுச் செல்கிறார்கள். வேட்டி, சேலைகள் போன்ற பரிசுப் பொருட்களும் வீடுவீடாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.பொதுமக்களும், பா.ம.க. தொண்டர்களும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவோரை பிடித்து காவல்துறையினரிடமும், வருவாய்த்துறையினரிடமும் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்திற்கும் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. சோதனைச் சாவடிகளில் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை போடத்தானே செய்வார்கள் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அரிசி, வேட்டி, சேலை மூட்டைகளை கட்சி தோரணங்களுடன் கடத்தி வந்த லாரிகள், இரு சோதனைச் சாவடிகளை சுதந்திரமாகக் கடந்து தொகுதிக்குள் வந்திருக்கின்றன. அவை மடக்கி பிடிக்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. 24 மணி நேரம் கழிந்த பிறகும் அதுகுறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. யாரையும் கைது செய்யவும் இல்லை.
தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது? முறைகேடுகளை தடுக்கும் சட்டங்களும், அவற்றை அமல்படுத்த வேண்டிய ஆணைய அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தேர்தலில் பணம்தான் பிரதானம் என்பதை அனுமதித்தால், இனி தேர்தலை நடத்தவே தேவையில்லை. பொதுப்பணித்துறை வேலைகளையும், டாஸ்மாக் கடைகளை ஏலம் விடுவது போல, தொகுதிகளை ஏலம் விட்டு யார் அதிகத் தொகைக்கு எடுக்கிறார்களோ அவர்களே அந்த தொகுதியில்எம்.எல்.ஏ., அல்லது எம்.பி. என்று அறிவிக்கலாம் அல்லது டெண்டர் கோரி அதில் யார் அதிக தொகையை குறிப்பிடுகிறார்களோ அவர்களுக்கு தொகுதியை விற்கலாம். அப்படிச் செய்தால் அரசியல் கட்சிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வேலை மிச்சமாகும்.
தேர்தலில் பணம் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிப்பது நமது ஜனநாயகத்திற்கு வேட்டு வைத்துவிடும். பிறகு பணநாயகமே நாட்டை ஆளும்.இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் தனது தூக்கத்தைக் கலைத்து,பண விநியோகத்தையும், இதர முறைகேடுகளையும் தடுத்து நிறுத்தி, பென்னாகரம் இடைத்தேர்தல் வரும் காலத்தில் நாட்டிற்கே வழிகாட்டியாக அமையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




