நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூவர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலராக இருந்தார். அக்ரகாரம் பகுதியில் கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து செல்போனில் படம் எடுத்து அதை இணையதளத்தில் பரவ விட்டனர். இதுபற்றி அந்தப் பெண்ணின் தாயார் காவல்துறையிடம் புகார் செய்வதற்கு வேலுச்சாமி உதவியாக இருந்தார். இதனால் கந்துவட்டி கும்பல் ஆத்திரம் அடைந்து அவரை வெட்டிக் கொன்றனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்த நிலையில் பூபதி (34), சிவகுமார் (28), ராஜேந்திரன் என்ற ராஜ்கமல் (30) ஆகியோர் சென்னை ஜார்ஜ் டவுன் 15-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
மூவரையும் வருகிற 17ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க நீதிபதி சுந்தரமூர்த்தி உத்தரவிட்டதையடுத்து அவர்கள் 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சரணடைந்த மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க பள்ளிப்பாளையம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




