+2 தேர்வில் காப்பி அடித்த கடலூர் மாணவ- மாணவிகள் 40 பேர் பிடிபட்டுள்ளனர். இதனால் தேர்வுமைய கண்காணிப்பாளர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை பிடிபட்ட 40 மாணவ-மாணவிகளில் 18 பேர் இணை இயக்குனர்களால் பிடிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் காட்டுமன்னார்கோவில் பருவதராஜகுலம் பள்ளியில் ஒரே நாளில் 10 பேர் பிடிபட்டனர். இதனால் இத்தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் வெவ்வேறு மையங்களுக்கு இடமாற்றம் செய்ய இணை இயக்குநர் உத்தரவிட்டார்.
முதன்மை கல்வி அதிகாரி எச்சரித்திருந்ததையும் மீறி மறுநாள் நடந்த தேர்விலும் காப்பி அடித்த 3 தனித்தேர்வர்களை இணை இயக்குனர் கருணாகரன் தலைமையிலான பறக்கும் படையினர் பிடித்தனர். இந்த மூவரும் கடலூரில் உள்ள புனித வளனார் மேல்நிலைப்பள்ளி தேர்வுமையத்தில் தேர்வு எழுதியவர்கள். இதனால் அந்த தேர்வுமையத்தில் பணியாற்றிய அனைத்து அலுவலர்களையும் இடமாற்றம் செய்யும்படி முதன்மை கல்வி அதிகாரிக்கு இணைஇயக்குனர் கருணாகரன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்படி புனித வளனார் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பணியாற்றிய முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் அலுவலர், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 30 பேர் வேறு தேர்வு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட 30 பேருக்கு பதிலாக வேறு தேர்வுமையங்களில் பணியாற்றிய 32 பேர் புனித வளனார் தேர்வு மையத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்

| < முந்தையது | அடுத்தது > |
|---|




