புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் இன்றுமாலை திறக்கப்படுவதை யொட்டி,சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. நிகழ்சியில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சென்னை வருவதையொட்டி, மத்திய கமாண்டோ படையினர் தலைமைச் செயலக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விமான நிலையத்திலிருந்து புதிய தலைமைச் செயலகம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபை வளாகத்தை முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், இன்று மாலை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைக்கிறார்.சோனியா காந்தி, கவர்னர் :சுர்ஜித்சிங் பர்னாலா, மாநில முதலமைச்சர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.
முக்கிய பிரமுகர்கள் வருகையை யொட்டி சென்னை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.புதிய தலைமைச் செயலக வளாகத்தில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அதிரடிப்படை மற்றும் கமாண்டோ படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மற்றும் சோனியா ஆகியோர் இன்று மாலை வருவதையொட்டி விமான நிலையத்திலிருந்து புதிய தலைமைச் செயலகம் வரை சாலையின் இருபுறத்திலும் போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.தலைமைச் செயலக வளாகம் முழுவதும் மத்திய காவல் படையின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் தலைமைச் செயலகத்துக்கு உள்ளே செல்பவர்கள் முழுவதும் சோதனையிடப்பட்ட பிறகே அனுப்பப்படுகின்றனர். சாலைகளில் மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் வருகையையொட்டி நேற்று மாலை 4 - 5 மணி வரை பிரம்மாண்டமான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை பிரதமர் வரும்போது என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுமோ அதன் அடிப்படையில் ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.
சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.இந்நிலையில் திறப்பு விழாவையொட்டி சென்னை காவல்துறையும் புறநகர் காவல்துறையும் போக்குவரத்தில் மாற்றங்களை செய்துள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




