"மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா குறித்து நாடு தழுவிய பொது விவாதம் நடத்த வேண்டும்" என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே.கிருஷ்ணசாமி கருத்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும் போது, "பலத்த எதிர்ப்புக்கு இடையே மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதா காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதற்கு தான் பயன்படுமே தவிர, ஆண்டுக்கு 2 சேலை கூட வாங்குவதற்கு வசதியில்லாத பெண்களின் நிலையை உயர்த்த உபயோகமாக இருக்காது.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவால் ஏதாவது பலன் கிடைக்கும் என கருதினால்கூட, அதில் கண்டிப்பாக அனைத்து சமூகத்தினருக்கும் உள் இடஒதுக்கீடு அவசியம் வழங்கப்பட வேண்டும். முற்றிலும் பெண்களே வாக்களிக்கும் தொகுதிகளை உருவாக்கினால் மட்டுமே முழுமையான இடஒதுக்கீடு வழங்கியதாக இருக்கும். இல்லையெனில் ஆண்களின் கைப்பாவையாக பெண்கள் செயல்படும் நிலை உருவாகும்.
ஆகவே, இந்த மசோதா குறித்து மக்கள் முன்பு அனைத்து நிலைகளிலும் பொது விவாதம் நடத்த வேண்டும். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவின் உண்மை நிலையை விளக்கும் வகையில் சென்னையில் விரைவில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் ஆகியோரை அழைக்க உள்ளோம்" என்று கிருஷ்ணசாமி கூறினார்

| < முந்தையது | அடுத்தது > |
|---|




