இலங்கையின் கடற்பரப்பில் நேற்றைய தினம் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி இருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எவையும் விடுக்கப்படவில்லை.
சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான் என உலகின் பல நாடுகளிலும் சாதாரண நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று இலங்கை கடற்பரப்பிலும் நில அதிர்வு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து தென் கிழக்கு கடற்பரப்பில் 730 மைல்கள் தொலைவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதன் சேத விபரங்கள் குறித்த உடனடித்தகவல் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.
இதற்கிடையில் நேற்று மீண்டும் சிலியில் 5 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவை 5 ரிக்டர் அளவிலும் குறைவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிலிப்பைன்சிலும் 5 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஓன்று உணரப்பட்டுள்ளது. உலகெங்கும் தொடர்ந்து வரும் நில அதிர்வுகள் மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




