புதுடில்லி: பகல் முடிந்து இரவு தொடங்கியதும் தானாக தெரு விளக்குகள் எரியக்கூடிய வகையில் புதிய தொழில் நுட்ப யுக்தியை புதுடில்லி மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் டில்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியையொட்டி, மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, தெரு விளக்குகள் தானாகவே இரவில் எரிந்து, பகலில் அணையும் வகையில், ரூபாய் 200 கோடி திட்டத்தில் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து, டில்லி மாநகராட்சி கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா கூறியதாவது:பொதுவாக தெரு விளக்குகள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் எரியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் இரவு 7 மணி வரை கூட வெளிச்சம் இருக்கும். அதே போல அதிகாலை 5.30 மணிக்கே சூரிய வெளிச்சம் கிடைக்கும்.
இந்த சமயங்களில் நேர விகிதத்தில் தெரு விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாகிறது. இதை தடுக்க, ஜி.எஸ்.எம்., மற்றும் ஜி.பி.ஆர்.எஸ்., முறையில் அனைத்து தெரு விளக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகின்றன. சூரிய வெளிச்சம் மறைந்ததும் தெரு விளக்குகள் ஒளிர ஆரம்பித்து விடும். இதே போல காலையில் சூரிய வெளிச்சம் வந்ததும் தெரு விளக்குகள் தானாகவே அணைந்து விடும்.
இந்த திட்டத்தால் மின்சாரம் சேமிக்கப்படுவதோடு, கரியமிலவாயுவின் வெளியேற்றமும் தடுக்கப்படுகிறது. இந்த புதிய தொழில் நுட்ப முறையில் மின்சார திருட்டையும் தடுக்க முடியும்.இரண்டு கட்டமாக இந்த திட்டத்தை 101 கிலோ மீட்டர் தூரத்துக்கு 52 சாலைகளில் செயல்படுத்த உள்ளோம். வரும் மே மாதத்துக்குள் இந்த பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு மெஹ்ரா கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




