ராமநாதபுரம் : பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் இலவச பஸ் பாஸ் எடுத்து வர மறந்த மாணவியை அழவைத்து அபராதம் விதித்த அதிகாரிகளின் செயல், பொதுமக்களிடம் மிகுந்த வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது.
அனைத்து கிராமத்து மாணவர்களும் கல்வியை பெற வேண்டும் என்பதற்காக அரசு தரப்பில் பஸ் பாஸ் மற்றும் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் பஸ் வசதியே இல்லை, வரக்கூடிய பஸ்சில் இடம் கிடைப்பதும் அரிது. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும், கிராமபுற மாணவர்கள் உயர் கல்வி தேடி நகர் பகுதிக்கு வருகின்றனர். இந்த பரபரப்பில் மறதி என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இதனால், பால்கரை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி சாரதா பிரீத்தா அதிகாரிகளினால் அவமானத்திற்கு ஆளாகி உள்ளார்.
ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர் டவுன் பஸ்சில் இடம் பிடிக்க வேண்டுமே, என்ற பதட்டத்தில் தனது பஸ் பாசை எடுக்காமல் மறந்து வந்து விட்டார். ராமநாதபுரத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்த போது, மாணவியிடம் பஸ் பாஸ் இல்லை. பள்ளிக்கு நேரமாகி விட்டதால் மறந்து வைத்து விட்டு வந்ததாகவும், மாணவி அதிகாரிகளிடம் கெஞ்சினார். அவர்களோ, அதை ஏற்க மறுத்து, அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர்
எட்டாம் வகுப்பு படிக்கும் அப்பள்ளி மாணவியிடம் அபராதம் செலுத்தும் அளவுக்கு பணமில்லை, ஆனால் அதிகாரிகள் தனது நிலைப் பாட்டில் உறுதியாக இருந்தனர். மாணவி அழுதும் எந்த பயனும் இல்லை. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த பொதுமக்கள், ஒத்த குரலில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க, அபராதம் நூற்றுக்கணக்கிலிருந்து 50 ரூபாயாக குறைக்கப்பட்டது. அதையும் பொதுமக்கள் சிலரே செலுத்திய பின் தான், மாணவியை விடுவித்தனர்.
இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிகாரிகளின் மேல் மிகுந்த வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




