நடிகையுடன் உல்லாசமாக இருந்த போலிச்சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக, "சன்னியாசிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்துதல் மற்றும் மோசடி" ஆகிய குற்றச்சாட்டுகள் கூறி மேலும் இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தலைமறைவாகியுள்ள போலிச் சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "நித்தியானந்தா சன்னியாசிகளுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார். எனவே அவரைத் தண்டிக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த கோர்ட், நித்தியானந்தா நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதை ஏற்று ஏப்ரல் 2ம் தேதி நித்தியானந்தா ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜராகவுள்ளார்.
இதேபோல் சேலம் கோர்ட்டில் நித்யானந்தா மீது வக்கீல் ஒருவர் பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ்.நகரை சேர்ந்தவர் வக்கீல் லட்சுமணபெருமாள்சார்பில் வக்கீல்கள் பார்த்தசாரதி, எஸ்.ஆர்.அண்ணாமலை ஆகியோர் நித்யானந்தா மீது சேலம் நீதித்துறை நடுவர் 5வது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
"வக்கீல் லட்சுமணபெருமாள் நித்யானந்தாவின் தீவிர பக்தர். அவர்மீது ஏற்பட்ட பக்தி காரணமாக பெங்களூரிலுள்ள ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த 18.2.2010 அன்று சேலம் சீரகாபாடியில் உள்ள நித்யானந்த பீட கிளை திறப்பு விழாவுக்கு வந்திருந்த நித்தியானந்தாவிடம் லட்சுமணபெருமாள், தனது மனைவி வசந்திக்கு ஒருபக்கத் தலைவலி இருப்பதாக கூறினார்.
நித்தியானந்த பீடத்துக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை கொடுத்தால் தலைவலியைத் தன் தியானத்தால் தீர்த்து வைக்கிறேன் என்று கூறியதைத் தொடர்ந்து ரூ.25 ஆயிரம் பணத்தை லட்சுமணபெருமாள் கொடுத்தார். ஆனால் அவரது மனைவிக்கு தலைவலி தீர்ந்தபாடில்லை.
நித்தியானந்தா பொறுப்பற்ற நிலையில் ஆசிரமம் நடத்தி புகார்தாரரின் மதஉணர்வை புண்படுத்தியுள்ளார். தன்னிடம் தெய்வீக சக்தி உள்ளது என்று வக்கீல் லட்சுமண பெருமாளிடம் ரூ.25 ஆயிரம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதற்கு கோர்ட்டில் அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. வழக்கைப் பரிசீலித்த நீதிபதி அதை விசாரணைக்கு ஏற்று வருகிற 22-ந் தேதிக்குத் தள்ளி வைத்தார்.
தற்போது நித்தியானந்தா ஹரித்வாரில் ரகசிய இடத்தில் தங்கியிருப்பது உறுதியாகியுள்ளது. அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி உள்ளதாலும் ஏற்கனவே தமிழக கர்நாடக போலீஸிலும் வழக்குகள் உள்ளதாலும் ஹரித்துவாரிலிருந்து வேறிடத்துக்கு அவர் மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




