சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பால் உற்பத்தி குறைவால் ஆவின் நிறுவனத்தில், தினமும் 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் நடைபெறவில்லை. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு, வாடிக்கையாளர்கள் பரிதவிக்கின்றனர்.
ஆவின் நிறுவனம் கூட்டுறவு சங்கங்களில் இருந்து பால் கொள்முதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பதப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர், அரை லிட்டர், 200 மி.லி., என பல பாக்கெட்' களாக விற்கப்படுகின்றன. தமிழகத்தில் தினமும் சராசரியாக, 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. பொதுவாக கோடை காலத்தில் பால் உற்பத்தியில் சரிவு ஏற்படும். ஜனவரி, பிப்ரவரியில், மாடுகளுக்கு சினை பிடிக்கும் பருவம். கன்று ஈன்று ஆறு மாதம் வரை பால் கிடைக்கும். தற்போது சினை பிடிக்கும் தன்மை மிகவும் குறைந்துள்ளது.
மூன்று மாடுகளில் ஒன்று மட்டுமே சினை பிடிக்கிறது. இதனால், தற்போது பால் உற்பத்தி குறைந்துள்ளது. ஆவினில் தினமும் 20 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் 30 சதவீத பால் வினியோகம் குறைந்துள்ளது. இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், தீவன பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு பசும் புல் வளர்க்க, 50 சதவீத மானியம் தருகிறோம். மாடுகளுக்கு பால் சுரப்பதற்கான சத்துக்கள் இல்லாததால், உற்பத்தி குறைந்துள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
பால் உற்பத்தியை பெருக்க நெல்லை, ஈரோடு, வேலூரில் தாது உப்புக்கலவை (மினரல் மிக்சர்) பவுடர் தயாரிக்கும் ஆலை அமைத்துள்ளோம். இந்த பவுடரை தினமும் 50 கிராம் வீதம் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். இதை குறைந்த விலையில் கொடுக்கிறோம். இதுபோல உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




