புதுடில்லி : புதுடெல்லியில் குருபாபா ராம்தேவ் என்ற சாமியார் அரசியல் களத்தில் குதித்துள்ளார். அரசியலை தூய்மைப்படுத்துவதற்காக அரசியல் கட்சியை துவக்கியுள்ளார். சர்வதேச அளவில் யோகா பயிற்சி அளிப்பதில் புகழ் பெற்றவர் பாபா ராம்தேவ். மன அழுத்தங்களை போக்கும் வகையிலான பல்வேறு யோகா கலைகளை கற்றுத் தருகிறார். இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் யோகா முகாம்களை இவர் நடத்தி வருகிறார். தற்போது இவருக்கு அரசியல் ஆசை வந்துள்ளது. 'ஸ்வபிமான் அபியான்' என்ற பெயரில் அரசியல் கட்சியை துவக்கப் போவதாக இவர் அறிவித்துள்ளார்.
இந்திய அரசியலில் மாசுபடிந்துள்ளது அதை தூய்மைப்படுத்துவதற்காகவே அரசியல் கட்சியை துவக்கியுள்ளேன். அடுத்த லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். முதற்கட்டமாக, ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் 10 லட்சம் உறுப்பினர்கள் வரை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். ஊழல் கறை படியாதவர்கள் மட்டுமே கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர் தகுதியான நபரை அடையாளம் கண்டு, அவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்துவோம். என்று கூறிய பாபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். எந்த பதவியையும் ஏற்க மாட்டேன் என்றார்.
ரூ.300 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான கருப்பு பணம், இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது முறையான சட்ட விதிமுறைகளின்படி, இந்த பணம் முழுவதையும் இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வந்து, வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். 2020ம் ஆண்டுக்குள் இந்த பணம் முழுவதையும், நம் நாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும். இதனால் சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா அசைக்க முடியாத பலம் பெற்று விடும். வல்லரசு நாடாக உருவெடுக்கும்.
யோகா பயிற்சி கற்றுக் கொடுப்பவர்கள், அரசியல் ஆசையுடன் செயல்படுவதாக, உ.பி., முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகள், எங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை ஏற்க மாட்டார்கள். ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, பணம் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மாலைகளை உருவாக்க அவற்றை பயன்படுத்தக் கூடாது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




