ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலம் நகரில் பாலஸ்தீனர்களின் குடியிருப்புக்கு அருகே வலுக்கட்டாயமாக மேலும் 1600 யூத இஸ்ரேலியக் குடியிருப்புகள் கட்டப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாஹூ அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடேன் முன்னிலயிலேயே அறிவித்ததால் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அரசுமுறை உறவுகள் பதற்றம் அடைந்தன.
இஸ்ரேல் அமெரிக்காவை அவமானப் படுத்திவிட்டது எனக் கடுமையான சொற்களால் முன்னதாக விமர்சித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன், நேற்று அதற்கு நேர்மாறாக இஸ்ரேலுடனான அமெரிக்கப் பிணைப்பு பிரிக்க முடியாதது என்றும் இரு நாடுகளுக்கிடையே எந்தச் சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, நெதன்யாஹுவின் உறவினர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமா யூதர்களுக்கு எதிரானவர் என்றும் அவரை இஸ்ரேல் ஒதுக்கிவிட்டுத் தன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் மிகக் கடுமையாகச் சாடினார். இந்தக் கருத்திற்கும் தனக்கும் எத்தொடர்பும் இல்லை என நெதன்யாஹு கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா தான் யூதர்களுக்கு எதிரானவன் இல்லை என்றும், இஸ்ரேல் என்றென்றும் அமெரிக்காவின் உற்ற நண்பன் என்றும் கூறி, நண்பர்களுக்கிடையே ஊடல் வருவது இயல்பு தான் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஒபாமா தான் பொறுப்பு என்று நெதன்யாஹூவும் கூறியிருக்கிறார். இஸ்ரேல் தனது குடியிருப்புகளைத் தடையின்றி முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




