தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதை இம்மாதம் 22-ம் தேதிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது தோழி சசிகலா, சுதாகரன், மற்றும் இளவரசி ஆகியோர் மீதும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை பெங்களூரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய 42 சாட்சிகளிடம் மார்ச் 18 முதல் 26ம் தேதி வரை மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த தமிழக அரசுக்கு, இம்மாதம் 3-ம் தேதி நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
இதை அடுத்து நேற்று(வியாழக்கிழமை) சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த எஸ்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் எம்.சுப்பையா, சென்னையைச் சேர்ந்த செயற்பொறியாளர் எம்.வேலாயுதம், மாரியப்பன், மற்றும் செயற்பொறியாளர் ஏ. ஜெயபால் ஆகிய 5 பேரிடம் விசாரணை நடைபெற இருந்தது.
இதனிடையே தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கேசவநாராயணன் கடந்த 10-ம் தேதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 16-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாட்சிகளிடம் திட்டமிட்டபடி 18-ம் தேதி விசாரணை நடத்த இயலாது என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதை அடுத்து மேல் முறையீடு மனு மீதான விசாரணையை 19-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு நேற்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, நீதிபதி மல்லிகார்ஜுனய்யாவிடம் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்திருப்பதையும், அந்த மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
"இதனால் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வசதியாக திட்டமிட்டபடி இந்த நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடத்த இயலாது. இதனால் அவர்கள் ஆஜராகவில்லை.
எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சாட்சிகளிடம் விசாரணை நடத்தலாமென" நீதிபதியிடம் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனும் இதே கோரிக்கையை விடுத்தார். இதை அடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




