இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ரேசன் அரிசி, கோதுமை விலை உயருகிறது!

E-mail அச்செடுக்க

 

ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அரிசிக்கு 7 ரூபாயும் கோதுமைக்கு 5 ரூபாயும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள 11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரிசி,கோதுமைக்கு மட்டுமே இந்த விலை உயர்த்தப்படுகிறது. இந்தத் தகவலை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 6.5 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை விலை உயர்த்தப்படாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள 11 கோடி குடும்பங்களுக்கு அரிசி கிலோ ரூ. 8.30-க்கும் கோதுமை கிலோ ரூ. 6-க்கும் விற்கப்பட்டு வருகிறது. இனி அரிசி கிலோ ரூ. 15.37-க்கும் கோதுமை கிலோ ரூ.11-க்கும் விற்கப்படும் என்று தெரிகிறது.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு இணையாக ரேஷன் அரிசி மற்றும் கோதுமை விலை உயர்த்தப்படுகிறது. பொது விநியோக முறை மூலம் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை விலை 2002-ம் ஆண்டுக்குப் பின்னர் உயர்த்தப்படவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் கூறின.

வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்காக மத்திய தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமைக்கு மட்டுமே விலையை உயர்த்தப் பரிசீலிக்கப்படுகிறது. பல மாநிலங்களில் மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையை விட குறைந்த விலைக்கு ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் நிதிச்சுமையை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்கின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கும் மானிய விலையில் அரிசி வழங்கப்படுகிறது. இதற்கான கூடுதல் நிதியை தமிழக அரசு மானியமாக கொடுக்கிறது.

தற்போது மத்திய அரசு அரிசி விலையை உயர்த்தினால் தமிழக அரசுக்கு மேலும் கூடுதல் நிதிச் சுமையை அது ஏற்படுத்தும் என்று தெரிகிறது. எனவே தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இந்த விலை உயர்வை எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அதிக அளவில் மானியம் வழங்கி வருவதால் இந்த கூடுதல் நிதிச் சுமையைச் சமாளிக்க மாநில அரசுகளும் விலையை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.

ஏற்கெனவே, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்களின் விலை ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்கள் அரிசி விலையை உயர்த்தினால் மேலும் பாதிக்கப்படுவார்கள். எனவே தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் இந்த விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்