சென்னை: வெளிநாடுகளில் இயங்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், முதல் மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கு, அடுத்த கல்வியாண்டு முதல் சர்வதேச பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து சி.பி.எஸ்.இ., அதிகாரி ஒருவர் கூறியதாவது...
மேற்கத்திய மற்றும் தெற்காசிய நாடுகளில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் அதிகமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை அங்குள்ள இந்தியர்கள் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இந்திய பாடதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியை பயில்வதால், சர்வதேச அளவில் படிக்கும் மாணவர்களுடன் போட்டியிடுவதென்பது கடினமானதாகும். எனவே, சர்வதேச அளவில் போட்டியிட வசதியாக, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தவிர மற்ற மொழி பாடங்கள் மற்றும் சமூகஅறிவியல் பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்திற்கு முழுமையாக மாற்றி அமைக்கப்படும்
மேலும் இந்த பணி ஒரு மாதத்திற்குள் முடிந்துவிடும். அடுத்த கல்வியாண்டு முதல், வெளிநாடுகளில் இயங்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒன்று மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கு புதிய சர்வதேச பாடத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. பிறகு, படிப்படியாக பிற வகுப்புகளுக்கும் இப்பாடத் திட்டம் அமல்படுத்தப்படும். இந்திய வரலாற்றை பற்றி மட்டுமே கூறாமல், இந்திய வரலாறு மற்றும் உலக வரலாறு குறித்தும், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
இந்தியாவில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் பாடத் திட்டத்தில், தற்போதைக்கு மாற்றம் இல்லை. எதிர்காலத்தில், அவையும் சர்வதேச பாடத் திட்டத்திற்கு மாற்றப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




