காவல்துறையில் பணியிலிருக்கும் போதே, சட்டவிரோதமாக பயங்கரவாத அமைப்பு துவங்கி அதற்கு கமாண்டராக செயல்பட்டு வந்த காவல்துறை அதிகாரியைக் காவல்துறை தேடி வருகிறது. பயங்கரவாத அமைப்பு துவங்கிய பின் சுமார் ஓராண்டு காலம் அவருக்கு அரசிடமிருந்து ஊதியமும் வழங்கப்பட்டு வந்தச் செய்தியும் வெளியாகியுள்ளது.
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை துணை கண்காணிப்பாளராக சாம்பியன் சங்மா என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஓராண்டாக பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. அவரது வீடும் பூட்டப்பட்டு கிடந்தது. காவல்துறை உயர் அதிகாரி மாயமான சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல் கிடைத்து மேகாலயா காவல்துறை அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
காவல்துறை அதிகாரி சாம்பியன் சங்மா கடந்த ஓராண்டாக தேசிய விடுதலை ராணுவம் என்ற பெயரில் பயங்கரவாத அமைப்பு ஒன்றைத் துவக்கி அதற்கு கமாண்டராக இருந்து பயங்கரவாதிகளைப் பயிற்றுவித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஷில்லாங்கில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், "சாம்பியன் சங்கா குறித்த தகவல் கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்தோம். உள்துறை அமைச்சகத்திலிருந்து அவருக்கு மாதம்தோறும் ஊதியம் அனுப்பப்பட்டு வந்தது. அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக இப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள், நிலக்கரி வியாபாரிகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கேட்டு சங்மா மிரட்டியிருக்கிறார். தலைமறைவு வாழ்க்கை நடத்தி, மிரட்டல்களை விடுத்து வரும் சங்மாவை தீவிரமாகத் தேடி வருகிறோம். அவரது தீவிரவாத அமைப்புடன் எந்தெந்த அமைப்புகள் தொடர்பு வைத்துள்ளன என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்" என்று கூறினார்.
முன்னர், மாலேகான் குண்டுவெடிப்பில் கர்னல் புரோகித் என்ற இராணுவ உயரதிகாரிக்குத் தொடர்பு இருந்ததும் இஸ்ரேலை மையமாக கொண்டு ஹிந்துத்துவ அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு அவர் முயற்சித்திருந்தார் என்ற தகவலையும் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட ஏ.டி.எஸ் தலைவர் கார்கரே கண்டுபிடித்திருந்தார். அந்தக் குண்டுவெடிப்பில், இராணுவத்திலிருந்து ஆர்.டி.எக்ஸ் முதலான பயங்கர ஆயுதங்களைக் கர்னல் புரோகித் கடத்திப் பயன்படுத்தியிருந்ததும் கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில், காவல்துறை உயரதிகாரி ஒருவர் அரசிடமிருந்து ஓராண்டு காலம் ஊதியம் பெற்றுக் கொண்டே, பயங்கரவாத அமைப்பொன்றைத் துவங்கி செயல்பட்டு வருவது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




