பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய சிக்கன நடவடிக்கைகள் குறித்து அந்நிறுவனத்திற்கும் விமான ஊழியர்கள் தொழிற்சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.
சுமார் 13 ஆண்டுகளுக்குப்பிறகு பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் இத்தகைய வேலை நிறுத்தத்தை சந்திக்கிறது. சனிக்கிழமை தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதன் விளைவாக பிரிட்டிஷ் ஏர்வேய்ஸில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த ஆயிரக்கணக்கானோரின் பயணங்கள் தடை பட்டிருக்கின்றன. பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனம் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்படும் தொலைதூர பயணச்சேவைகளில் 60 சதவீதமும் குறைந்த தொலைவுச் சேவைகளில் 30 சதவீதமும் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
நிலைமையை சமாளிப்பதற்காக பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனம் மற்ற விமான நிறுவனங்களிடமிருந்து விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. விமான நிலையப் பணியாளர்கள் சிலரை தற்காலிக விமானப் பணியாளர்களாக நியமித்துள்ளது. சில பயணிகளின் பயணங்களை வேறு விமான நிறுவனங்களுக்கும் மாற்றிக் கொடுத்துள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




