பிரதமர் மன்மோகன் சிங் தயக்கம் காட்டாமல் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "எவ்வித காரணமும் வெளியிடாமல், இரண்டாம் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்டு இருந்த தேதி 1.10.2007 என்பதை 25.9.2007 என மாற்றி 10.1.2008 அன்று பிற்பகல் 2.45 மணி என ஒரு பத்திரிகைச் செய்தியை தொலைதொடர்புத் துறை திடீரென வெளியிட்டது. அதே நாளில் பிற்பகல் 3.30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நேரத்திற்குள் 1,500 கோடி ரூபாய்க்கான வரைவோலையை எப்படி சமர்ப்பிக்க முடியும் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆகவே இந்த நடவடிக்கையின் மூலம் பகிரங்கமாக சலுகை அளிக்கப்பட்டிருப்பதும், உள்ளுக்குள் பேரம் நடைபெற்றிருப்பதும் தெரியவருகிறது.
இந்தச் சதித் திட்டத்தை தெரியாமல், பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்களுடைய வரைவோலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால் விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி நாளை முன்தேதியிட்டு மாற்றியமைத்த திடீர் முடிவை எதிர்த்து எஸ்டெல் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் அமர்வு முன்பாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை முதலில் வருபவருக்கு முதலில் கொடுப்பது என்ற கொள்கை மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை மாற்றி அமைத்தது ஆகியவை பிரதமரின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட முடிவுகள் என தொலைத்தொடர்புத் துறை தெரிவித்தது. ஆனால், ஊடகங்கள் வெளியிட்டுள்ள விரிவான ஆவணங்கள், இந்த சர்ச்சைக்குரிய முடிவுகளில் பிரதமருககு எந்தவிதப் பங்கும் இல்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றன.
தொலை தொடர்புத் துறையின் வாதங்களையும், விளக்கங்களையும் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரித்தவுடன், அதனை எதிர்த்து தொலை தொடர்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதர்ஷன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜார் ஆகியோர் முன்பு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் “அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்” என்ற வாக்கியத்தை தொலை தொடர்புத் துறை நீக்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள மேல்முறையீடு வெகு விரைவில் நிராகரிக்கப்படும் என்பது தெளிவாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, மூன்று வட்டங்களில் பணிகளை ஆரம்பித்த புகார்தாரரான எஸ்டெல் நிறுவனத்திற்கு நிர்ப்பந்தம் கொடுக்க முடிவு செய்தார் ராசா. இதனையடுத்து, “பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு தங்களது பணிகள் நிறுத்தப்படுகின்றன” என்ற அளவில் இரண்டு வரி ஆணையை அலுவலக நேரம் முடிந்த பிறகு, கீழ் நிலையிலுள்ள தொலை தொடர்பு அதிகாரி மூலம் 6.3.2010 அன்று அனுப்பி வைத்தார் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசா.
“பாதுகாப்பு காரணம்” என்பது என்னவென்று விவரிக்கப்படவில்லை. இதற்கான முன்னறிவிப்பு ஏதும் அந்த நிறுவனத்திற்கு அளிக்கப்படவுமில்லை. முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல், பணிகளை நிறுத்த தொலை தொடர்பு துறை உத்தரவு பிறப்பித்தது இது தான் முதன் முறை. தங்களுடைய வியாபாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, தொலை தொடர்புத் துறை அமைச்சருக்கு எதிரான புகாரை எஸ்டெல் நிறுவனம் வேறு வழியின்றி 8.3.2010 அன்று திரும்பப் பெற்றுக் கொண்டது.
இதன் பிறகு, சமாதான ஒப்பந்தம் ஒன்று தயாரித்து கையொப்பமிடப்பட்டது. தொலைத் தொடர்புத்துறை சார்பில், அந்த ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றத்தின் முன்பு இந்திய தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார். ஆனாலும், ராசாவுக்கு நிவாரணம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவிற்கு பங்கு இருக்கிறது என்பது எவ்வித சந்தேகமுமின்றி தெளிவாகிறது. தனக்கு எதிரான நடவடிக்கைகளை தடை செய்ய மத்திய அமைச்சர் பதவியை ராசா தவறாக பயன்படுத்த தயங்க மாட்டார் என்பது அவரது இடைவிடா செயல்களின் மூலம் நன்கு தெளிவாகிறது. மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கை தற்போது விசாரித்துக் கொண்டிருக்கிறது.
ராசா கடந்து வந்த பாதையை வைத்துப் பார்த்தால், மத்திய புலனாய்வுத் துறை உண்மையைக் வெளிக் கொணருவதை தடுக்க தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்பது தெளிவாகிறது. நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசா நீக்கப்பட வேண்டும். தற்போது உச்ச நீதிமன்ற ஆணையும் அதற்கு ஆதரவாக உள்ளது. எனவே, ராசாவை பதவி நீக்கம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் மேலும் தயக்கம் காட்டக் கூடாது. மத்திய அமைச்சர் ராசாவை பதவி நீக்கம் செய்வதன் மூலம் தான் ஊழல் நடவடிக்கைகளை ‘துளிகூட சகித்துக் கொள்ள முடியாது’ என்ற பிரதமரின் கூற்றை மக்கள் நம்புவார்கள்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




