இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (21-03-2010)

E-mail அச்செடுக்க

 

 

 

தள்ளாடும் கடன் சுமையில் உள்ள தமிழ் நாடு அரசு ரூ 450 கோடி செலவழித்து புதிய சட்ட மன்ற கட்டிடம் கட்ட வேண்டுமா? - ஜார்ஜ்

"பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே"

கடன் இருக்கிறது என்பதற்காக உண்ணாமல் உடுத்தாமல் இருக்கிறோமா?

கடன் இருக்கும்போதே இலவச அடுப்பு, இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற மத்தாப்புத் திட்டங்களுக்குப் பணத்தை அள்ளி வீசியதை விட இந்தப் புதுக் கட்டடம் பயனுள்ளதே!



மகளிர் மசோதாவால் யாருக்கு லாபம்? மகளிருக்கா அல்லது அரசியல்வாதிகளுக்கா? - அப்துல்


அரசியல்வாதிகளுக்குத்தான் பயன்.

இப்போதும் பெண் குடியரசுத் தலைவர், பெண் நாடாளுமன்ற அவைத்தலைவர், பெண் அமைச்சர்கள் என இருக்கிறார்களே...

மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுத்து மக்கள் மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிட வைப்பதும் அதன் பலனை அறுவடை செய்வதும் அரசியல்வாதிகளே.

மகளிர் இட ஒதுக்கீடு என்று சொல்லி மகளிரை மேலும் சுரண்டுவதுதான் நடக்கும்.



நித்யா மற்றும் ரஞ்சிதா மேட்டர் இவ்வளவு பரபரப்பாக பேசப் பட்ட பிறகும் அவர் தவறு செய்ய வில்லை என அவரின் சீடர்கள் கூறுகிறார்களே? - கார்த்தி

செய்தியில் தொடர்புடைய இருவருமே தாம் தவறு செய்யவில்லை என உறுதியுடன் கூறும்போது சீடர்களும் அதை வழிமொழிவதில் வியப்பென்ன?




சாமிகள் எல்லாரும் ஆசாமிகளாகி வருகிறார்களே ஏன்? - மாலதி


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்த தொழித்து விடின்.

துறவுக் கோலம் புனைபவர் எல்லாரும் துறவிகளல்லர்.

நித்யானந்தா தொடர்பான மற்றொரு வினாவின் விடையையும் காண்க!




அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை நிறைவேற்றுவது யாருக்கு லாபம் ? - ரகுமான்


வெளிநாட்டு வணிகர்களுக்கே!

புதிய பொருளாதாரக் கொள்கை, உலகமயமாக்கல் என்பனவெல்லாம் உள்நாட்டவனை ஓட்டாண்டியாக்கவே..




போலிச்சாமியார்களை வளர்ப்பதும் அவர்கள் வசமாக மாட்டிக்கொண்டால் அதை வைத்து வயிறு வளர்ப்பதும் உங்களைப்போன்ற பத்திரிக்கைகளுக்கு வாடிக்கையாகிவிட்டதே! என்றைக்கு இந்த நிலை மாறும்? - தமிழன்பன்


செய்தியை வாசகனுக்குக் கொண்டு சேர்ப்பது ஊடகத்தின் கடமை.

ஊடக நிறுவனங்களின் தலைமையின் சாய்வு அல்லது சார்புக்கேற்பச் செய்தியின் நிறமும் சுவையும் வேறுபடலாம்.

போலிச்சாமியார்களை வளர்ப்பதும் அவர்கள் வசமாக மாட்டிக்கொண்டால் அதை வைத்து வயிறு வளர்ப்பதும் என்ற குற்றச்சாட்டு கடுமையானது.

மக்கள் நடுவே பெயர் பெற்ற ஒருவரின் எழுத்துகளை வெளியிடுவதன் வாயிலாய் அவரது கருத்துகள் மக்கள் நடுவே பரவுவதோடு இதழ்களின் விற்பனையும் கூடும் என்பதே கணக்கு.

அவர் தவறு செய்தால் அதை வெளிப்படுத்துவது கூடாது என்றா கூற வருகிறீர்கள்?




மோடிக்குச் சம்மன் அனுப்பப்பட்ட தகவல் வெளியான உடனேயே குஜராத்தில் இரு முஸ்லிம் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட தகவல் குறித்து? - ரமேஷ்


போலி மோதல்கள் வாயிலாய் இஸ்ரத்ஜஹான், ஷொரபுதீன் ஷெய்க் போன்ற குற்றமற்ற அப்பாவிகளைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட மோடிக்கு இது புதிதன்று.




மாயாவதிக்கு அணிவிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுமாலை, கறுப்புப்பணம் என்கிறார்களே. உண்மையா? - சாமிநாதன்


கறுப்போ வெளுப்போ? அது மக்களை வஞ்சித்த பணம் என்பதில் ஐயமில்லை.




பிச்சை எடுப்பவர்கள் கூட கைப்பேசியுடன் திரிகிறார்கள், நாடு முன்னேறி விட்டதன் அடையாளம் தானே இது? - ஜோதி


நாடு முன்னேறினால் அவன் ஏன் பிச்சை எடுக்கிறான்?

நாடு முன்னேறினால் அவன் ஏன் பிச்சை எடுக்கிறான்?

பசியைப் போக்கப் பிச்சை எடுப்பவனிடம் கைபேசி இருக்காது; கைபேசி வைத்திருப்பவன் பிச்சைத் தொழிலதிபனாகத்தான் இருப்பான்.

ஆம்! பிச்சை எடுப்பதை நிறுவனப்படுத்தித் தொழிலாக நடத்துபவர்களைப் பற்றி நீங்கள் செய்தி ஊடகங்கள் வழி அறிந்ததில்லையா?

இந்தத் தொழில் செய்பவர்களைப் பற்றித் தொலைக்காட்சிகளில் செய்திவிமர்சனம் வந்துள்ளதே?

இயக்குநர் பாலாவின் 'நான்கடவுள்' படம் இத்தொழிலதிபர்களைப் பற்றிக் காட்டியுள்ளதே?



டியூப் இல்லாத டயர்கள் வண்டிகளில் பயன்படுத்தப்படுகிறதே. வண்டி நகரும் போது காற்று வெளியேறாமல் இருப்பது எப்படி? - குமார்


வாகனங்களுக்குச் சக்கரங்கள் முதலில் பொருத்தப் பட்ட போது அவை மரக்கட்டைகளால் செய்யப்பட்ட உருளைகளாக இருந்தன. காலப் போக்கில் மரத்தின் தேய்மானத்தை மனதில் கொண்டு மரத்தின் இடம் உலோகத்தால் நிரப்பப்பட்டது.

உலோகம் மிக பளு நிறைந்ததாக இருந்ததால் இலகுவாக செல்லக்கூடியக் காற்று நிரப்பப் பட்ட இரப்பர் உருளிகள் சார்லஸ் குட் இயர் என்பாரால் வடிவமைக்கப்பட்டன.

காற்று நிரப்பப் பட்ட நவீன இரப்பர் உருளிகளுக்கு உள்ளபடி டியூப் எனப்படும் உள்குழாய் தேவையில்லை. ஏனெனில் இவ்வுருகளில் இருக்கும் Steel radials எனப்படும் எஃகு வளையங்கள் காற்று நிரப்பியவுடன் உருளியை மிக உறுதியாக வைத்திருக்கின்றன. மிக அதிகப் பளு சுமக்கும் சுமையுந்துகளிலும், சைக்கிள் எனப்படும் ஈருருளிகளிலும் உள்குழாய் எனப்படும் டியூப்கள் உள்ளீடு இடப்பட்ட காற்று வெளியேறாமல் தடுக்கப் பயன்படுகின்றன.

கல்லோ, ஊசியோ, ஆணியோ, கண்ணாடியோ கூரிய பொருள் எது தாக்கினாலும் அது டயரையோ உள்குழாயையோ தாக்கினால் காற்று வெளியேறத் தான் செய்யும்.

காற்றே இல்லாமல் முழுக்க இரப்பரால் செய்யப்பட்ட டயர்களும் பயன்பாட்டில் உள்ளன. வான்பறனைகளில் பயன்படும் டயர்கள் நைட்ரஜன் அல்லது ஹீலியம் போன்ற வாயுக்களால் நிரப்பப் பட்டிருக்கும். (ஹைட்ரஜன் ஹீலியத்தை விட எடைகுறைந்ததெனினும் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது; ஹீலியம் மந்த வாயு; நைட்ரஜன் பொதுவாக எதனுடனும் வினைபுரியாத வாயு; காற்றில் 78 விழுக்காடு நைட்ரஜன் தான்!)

 

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்