பயன்படுத்த தகுதியற்ற காலாவதியாகிப் போன மருந்து, மாத்திரைகளைத் தேதி மாற்றி மீண்டும் விற்பனை செய்தது தொடர்பாக சில நாட்களுக்கு முன் காவல்துறையினர் சின்மயாநகரில் உள்ள மருந்துக் காப்பகத்தைச் சோதனை செய்து அங்கு வேலை செய்த சுனிதா ராணி என்ற பெண் உட்பட 6 ஊழியர்களைக் கைது செய்த செய்தி நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
பொதுவாக மருந்து, மாத்திரைகளை அது தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு வருடம் மட்டுமே பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட காலத்துக்குப் பின் வேதியியல் மூலப்பொருட்களால் உருவாக்கப்படும் ஆங்கில மருந்துகளில் உள்ள மூலப் பொருட்கள் கெட்டுப் போய் விடுவதாலும் சில மருந்துகள் காற்று, உறை போன்றவையுடன் வினைபுரிந்து விஷத்தன்மையுடையதாக மாறிப்போவதாலும் அவை குறிப்பிட்டக் காலத்துக்குப் பின் பயன்படுத்த தகுதியற்றதாக மாறி விடுகிறது. அதன் காரணமாகவே மருந்து, மாத்திரைகள் அடைக்கப்பட்ட உறையின் பின் புறம் அது உற்பத்தி செய்யப் பட்ட தேதி மற்றும் அம்மருந்து காலாவதியாகும் தேதி முதலியவை அச்சிடப் பட்டு இருக்கும்.
மருந்து, மாத்திரைகளில் குறிப்பிட்டுள்ள காலாவதியாகும் தேதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அந்த மருந்து, மாத்திரைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றைத் திரும்பப் பெற்று அழித்து விட வேண்டும் என்பது மருந்துக் கட்டுப் பாட்டு அலுவலகம் விதித்துள்ள கடுமையான சட்டமாகும். அது போல மருந்து உற்பத்தி செய்யும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் காலாவதியாகி போன மருந்து, மாத்திரைகளைப் பாதுகாப்பாக அழிக்கும் வசதியையும் வைத்து இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை பல்வேறு நிறுவனங்களால் பின்பற்றப் படுவதில்லை என்பதே எதார்த்தமான உண்மை. அத்தோடு, காலாவதியான மருந்துகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திரும்பப் பெற்று அழிக்கின்றனவா? என்பதை மருந்து உற்பத்தி ஆவணங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படுவதில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகமும் சரியான அக்கறை காட்டுவது போன்று தெரியவில்லை.
அதன் காரணமாகவே பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களால் அங்கீகரிக்கப் பட்ட மொத்த விற்பனையாளர்களிடமே காலாவதியாகிப் போன மருந்து, மாத்திரைகளை அழிக்கும் பொறுப்பையும் வழங்கி விடுகிறது. இது மருந்து கட்டுப்பாட்டு விதிமுறை படி தவறு என்றாலும் அதனை யாரும் அவ்வளவாக கண்டுகொள்வது கிடையாது.
இவ்வாறு காலாவதியாகி வரும் மருந்து, மாத்திரைகளை மொத்த விற்பனையாளர்களும் முறையாக அழிக்காமல், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டி விடுகின்றனர்.
இவ்வாறு முறையாக அழிக்காமல், குறிப்பிட்ட இடத்தில் கொட்டப்படும் மருந்து, மாத்திரைகள் வேறு வழிகளில் திரும்பவும் விற்பனைக்கு வரவோ, மக்கள் பயன்படுத்த வாய்ப்பிருப்பதையோ எவரும் இதுவரை கண்டுகொண்டது போல் தெரியவில்லை. இதற்கிடையில், இவ்வாறு கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டக் கொண்டு வரப் படும் மருந்து, மாத்திரைகளை உள்ளே கொட்டுவதற்கு முன்னரே வெளியே நின்று சில கும்பல்கள் வாங்கி செல்வதாக எழுந்த புகாரையடுத்து மருந்துக் கட்டுப் பாட்டு ஆய்வாளர் இளங்கோ அதை குறித்து, சம்பவம் உண்மை தான் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம் அது குறித்து புகார் அளித்தார்.
மக்களின் உயிருடன் விளையாடும் அபாயம் ஒழிந்துள்ள இவ்விஷயம் தொடர்பான வழக்கில் தனிக் கவனம் செலுத்தி விசாரணை நடத்திய கொடுங்கையூர் காவல்துறையினர், கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ரவி மற்றும் அவரது மனைவி சுனிதா ராணி இருவரும் தான் குப்பை பொறுக்கும் சில நபர்களின் உதவியுடன் காலாவதியான மருந்து மாத்திரைகளை கிலோ ரூ 150 க்கு வாங்கி முன்னணி மொத்த விற்பனையாளர்களிடம் விற்று வந்துள்ளனர் என்பதைக் கண்டு பிடித்தனர்.
சுனிதா ராணியை விசாரித்ததில் காலாவதியான மருந்துகளை மீனாட்சி சுந்தரம், சஞ்சய் குமார், பாஸ்கரன் போன்ற மொத்த மருந்து விற்பனையாளர்களிடம் விற்று விடுவதாகவும் "அந்த மருந்துகள் மீனா ஹெல்த்கேருக்குச் சொந்தமான மருந்து காப்பகத்தில் வைத்து ரசாயன உதவியுடன் மருந்து, மாத்திரைகளில் பதியப்பட்டுள்ள பழைய தேதியை அழித்து விட்டு புதிய தேதியை அச்சிட்டு மீண்டும் சில்லறை கடைகளுக்கு அனுப்பப் படும்" என்ற தகவலையும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
சுனிதா ராணி கொடுத்த அதிர்ச்சிகரமான தகவலின் பேரில் சின்மயா நகரில் உள்ள மீனா ஹெல்த்கேருக்குச் சொந்தமான மருந்து குடோனை சோதனை செய்து அங்கு இருந்த காலாவதியான ரூ 4 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகளைக் கைப்பற்றி அங்கு பணியில் இருந்த 6 ஊழியர்களையும் கைது செய்தனர். கைப்பற்றப் பட்ட மருந்துகளில் கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளும் மருந்துகளும் அடக்கம். சம்பந்தப் பட்ட மருந்து குடோன் மீனா ஹெல்த்கேர் உரிமையாளர் மீனாட்சி சுந்தரத்துக்குச் சொந்தமானது. மீனா ஹெல்த்கேர் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் மருந்து விற்பனை தொழிலைக் கால் நூற்றாண்டு காலமாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருந்து காப்பகத்தில் நடத்தப் பட்ட சோதனையை அடுத்து மீனாட்சி சுந்தரம் மற்றும் சில முன்னணி மொத்த மருந்து வியாபாரிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களைத் தனிப் படை வலை வீசி தேடி வருகிறது.
பத்திரிக்கைகளில் வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்று பத்தோடு பதினொன்றாக இந்தக் குற்றத்தைக் கருதி ஒதுக்கி விடும் அளவுக்கு இது சாதாரண குற்றமல்ல. காலாவதியான மருந்துகளை உட்கொள்வதன் காரணமாக பெரிய அளவில் உடலுக்குப் பாதிப்போ ஏன் உயிரிழப்போ கூட ஏற்படலாம். இச்சம்பவத்துக்குப் பின் போலியான மருந்துகளையோ, காலாவதியான மருந்துகளை விற்றாலோ ஆயுள் தண்டனையும் ரூ 10 லட்சம் அபராதமும் செலுத்த வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் தற்போது தமிழக அரசால் தூசு துடைக்கப் படுகிறது என்பதே இதனால் மக்களுக்கு விளையும் கேட்டின் அளவினை எடையிட்டுக்கொள்ளலாம்.
கால் நூற்றாண்டு காலமாக மருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மீனா ஹெல்த்கேர், கடந்த 20, 25 ஆண்டுகாலமாக தயாரித்து விற்பனை செய்து வந்துள்ள மருந்துங்கள் உண்மையானவை தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்விஷயத்தில் எங்கெலாம் தப்பு நடந்துள்ளது என ஆராய்ந்தால் நமக்கே தலை சுற்றி விடும்.
ஆம். ஒவ்வொரு மருந்துக் கடைகளையும் அவ்வப்போது ஆய்வு செய்து போலி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளைக் களையெடுக்க வேண்டியது மருந்துக் கட்டுப் பாட்டு ஆய்வாளர்களின் பணியாகும். மாதம் குறிப்பிட்ட அளவு கடைகளை ஆய்வு செய்து சாம்பிள்களைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். மருந்துக் கட்டுப் பாட்டு ஆய்வாளர்கள் தங்கள் கடமையை சரிவர செய்கிறார்களா? காலாவதியான மற்றும் போலியான மருந்துகளைக் கண்டு பிடித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படுமா அல்லது அங்கும் பணம் விளையாடுமா என்பதெல்லாம் புரியாத புதிர் தான்!
மருந்து மற்றும் மாத்திரைகள் மொத்த வியாபாரிகள் மூலமாகவே சில்லறை மருந்துக் கடைகளுக்கு வருகிறது. மொத்த வியாபாரிகள் நினைத்தாலே காலாவதியான மருந்துகள் மற்றும் போலி மருந்துகளைப் புழக்கத்தில் விட முடியும். மீனாட்சி சுந்தரம் போன்ற குறுக்குப் புத்தி கொண்டவர்கள் பணத்துக்காக இது போன்ற வேலைகளை செய்து மக்களின் உயிருடன் விளையாடுகிறார்கள் .
அடுத்ததாக சில்லறை மருந்துக் கடைக் காரர்கள் மூலமாகவே மருந்து மாத்திரைகள் பொது மக்களுக்கு விற்கப் படுகிறது. சில்லறை மருந்துக் கடைகாரர்கள் செய்யும் மோசடிகள் ஏராளம். மருத்துவர் மருந்து சீட்டில் ஒரு மருந்தை எழுதிக் கொடுப்பார். அதை எடுத்துக் கொண்டு மருந்து கடைக்குச் சென்றால் கடைக் காரர் "அந்தக் கம்பெனி மருந்து இல்லை; வேறு கம்பெனியின் மருந்து இருக்கிறது; மருந்து ஒன்று தான் கம்பெனி தான் வேறு" என்பார். விவரம் தெரியாத ஏழை மக்கள், ஏதோ நோய்க்கு மருந்து கிடைத்தால் சரி தான் என்ற நினைப்பில் அதனை வாங்கிச் செல்கின்றனர்.
அதேபோன்று, விற்கப்படும் மருந்துகளில் அச்சிடப்படும் தேதியிலும் சில தகிடுதத்தங்கள் நடக்கின்றன. 10 அல்லது 12 மாத்திரைகள் அடங்கிய அட்டைகளின் பின்புறத்தில் ஒரு முனையில் மட்டும் கண்ணுக்குத் தெரியாத அளவிற்குச் சிறிதாக தேதியினை அச்சிடுகின்றனர். ஒவ்வொரு மாத்திரையின் பின்புறமும் தேதி விவரங்கள் அச்சிடப்படாததால், பெரும்பாலும் சில்லறையாக மாத்திரைகள் வாங்குபவர்களுக்கு அந்த மாத்திரையின் காலாவதி தேதி அறிவதற்கான சாத்தியமே இல்லை. அதை விடக் கொடுமையான விஷயம், மருந்து, மாத்திரைகளின் மீது அச்சிடப்படும் இந்தத் தேதி விவரங்களின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பெரும்பாலான மக்கள் இதுவரை உணராததாகும்.
சில மருந்து கடைகளில் வேலைபார்க்கும் சிப்பந்திகள், நேரடியாக மொத்த வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர். சில்லறை மருந்துக் கடைக் காரர்களுக்கு ஒரு மருந்து காலாவதியாகிப் போன மருந்தா இல்லையா? என்பது தெளிவாகத் தெரியும். இவ்வாறு மொத்த வியாபாரிகளிடம் தொடர்பில் இருக்கும் கடைச் சிப்பந்திகள் அவர்கள் தரும் அற்பக் கமிசனுக்காக காலாவதியான மருந்து, மாத்திரை விஷயத்தைக் கண்டுகொள்வதே இல்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சில மருத்துவர்களும் மருந்து கம்பெனிகள் கொடுக்கும் அன்பளிப்புகளுக்குப் பல்லிளித்துக் கொண்டு தரம் குறைந்த கம்பெனிகளின் மருந்துகளை எழுதிக் கொடுத்து நோயாளிகளின் உயிருக்கு வேட்டு வைக்கின்றனர்.
இது போன்று சம்பவங்கள் நிகழும்போது மட்டும் ஆட்சியாளர்கள் பரபரப்பாக ஒரு கூட்டம் போட்டு முறைகேடுகளைக் களைவது எப்படி என்று பேசி விட்டுக் கலைவார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்த மாதிரி முறைகேடுகளுக்கு மூல காரணமே அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும்தான். நம் நாட்டை உயிரைக் கொடுத்துக் காவல் புரியும் இராணுவத்தினருக்கான சவப் பெட்டி வாங்குவதிலும் சுடுகாட்டுக் கூரை போடுவதிலும் கூட ஊழல் புரிந்தவர்கள் அல்லவா நம் ஆட்சியாளர்கள்!
அப்படியே காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்தால் கூட, மீனாட்சி சுந்தரம் போன்ற பண முதலைகள் பணத்தால் அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவார்கள். அல்லது ஒரு 20 ஆண்டுகளுக்கு அதனை நீட்டிக்க வைத்து இடையே தடையுத்தரவும் வாங்கிக் கொள்வார்கள். எதையும் எதிர்கொண்டுக் குற்றவாளிக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதில் சிரத்தையாக செயல்படுஒரு சில நேர்மையான அதிகாரிகள் வேறு பொறுப்புக்கு மாற்றப் படுவார்கள். இவ்வாறு நாட்டு மக்களின் உயிருக்கே வேட்டு வைக்கும் இத்தகைய வழக்குகள் பிசு பிசுத்துப் போகும்.
திட்டம் போட்டு நாட்டு மக்களின் உயிருடனே விளையாடும் இத்தகைய குற்றப்பரம்பரையினரை ஒழிக்க பிறகு என்ன தான் வழி? குற்றம் செய்பவர்களுக்குத் தண்டனை கடுமையாக்கப் பட வேண்டும்; குற்றம் நிருபிக்கப் பட்டால் தாமதமின்றி உடனடியாக தண்டனை வழங்கப் பட வேண்டும்; இத்தகைய கொடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள குற்றவாளிகளைப் பிணையில் விடுவிப்பதை நீக்க சட்டம் இயற்றப் பட வேண்டும்; அத்தோடு, இத்தகைய நாட்டு மக்களின் உயிருடன் விளையாடும் குற்றங்களுக்குரிய வழக்குகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்கவும் வழிவகை செய்யப்பட வேண்டும்; அதைவிட முக்கியமாக, சட்டம் யாருக்கும் அடிபணியாமல் தன் கடமையை செய்ய வேண்டும்!
இவை அனைத்தும் நடக்க வேண்டுமெனில், நாட்டு மக்கள் உணர்ந்து செயல்பட ஆரம்பிக்க வேண்டும். எதையும் கேள்வி கேட்கும் மனப்பக்குவமும் ஏய்த்துப் பிழைக்கும் புல்லுருவிகளை அடையாளம் கண்டுச் சட்டத்தின் முன் நிறுத்தும் எழுச்சியும் மக்களிடையே உருவாக வேண்டும்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்; அதற்காக நாமும் உணர்ந்து செயல்படுவோம்; குற்றவாளிகளைக் களையெடுப்போம்!

| < முந்தையது | அடுத்தது > |
|---|




