ஒரிஸ்ஸா மாநிலத்தில் பேருந்து ஒன்று கண்ணி வெடியில் சிக்கியதில் குறைந்தது 10 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களுக்கு மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களே காரணம் என்று காவல்துறை சந்தேகப்படுகிறது. இருபதுக்கும் அதிகமான காவல்துறையினர் பயணித்த பேருந்து மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி சிதறுண்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே போன்று கடந்த வெள்ளியன்று இரவு சுமார் 1000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பீகார் மாவட்டத்திலுள்ள மத்திய ரிசர்வ் படை மற்றும் சிறப்பு ஆயுதப்படை முகாம் மீது திடீர் தாக்குதல் தொடுத்தனர். இன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய 1000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள், ரோந்து பணியிலிருந்த மத்திய ரிசர்வ் படையினரைச் சுற்றி வளைத்துத் தாக்கியதில் 70 காவலர்கள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் இந்தியப் படையினருடன் நேருக்கு நேர் மோதல் நடத்துகின்றனர் என்பது சாதாரண விஷயம் இல்லை!
நாட்டில் மாவோயிஸ்ட் நக்ஸல்களின் தாக்குதல்கள் கட்டுப்படுத்த இயலாத வகையில் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக வடகிழக்கு ரயில்வே மாவோயிஸ்டுகளின் தாக்குதலினால் சீர் குலைந்துள்ளது என்று கூறலாம். அந்த அளவுக்கு வடகிழக்கு ரயில்வேயின் மீது மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் அதிகம். மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களை ஒட்டு மொத்தமாக எடுத்துப் பார்த்தால், அரசை நிலைகுலைய வைக்கும் வகையில் அரசு நிர்வாகங்களை அச்சுறுதலிலேயே எந்நேரமும் வைக்கும் வகையிலும் ஆயுதப்படை, காவல்துறையினருக்கு எதிராகவுமே அதிகப்படியான தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர்; தொடுக்கின்றனர்.
நாட்டுக் குடிமக்களுள் ஒரு பகுதியினர் ஆயுதமேந்தி நாட்டின் நிர்வாகத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதன் காரணம் என்ன என்பதை அலச வேண்டியது கட்டாயமாகும். இவர்கள், அரசு நிர்வாகத்தையும் பாதுகாப்புப்படையினரையும் எதிர்த்து ஆயுதத் தாக்குதல் நடத்துவதுவதற்கு ஆதிவாசிகளின் உறுதுணை மிகபலமாக இருப்பதும் ஒரு காரணமாகும்.
ஆதிவாசிகளின் சம உரிமைகளுக்காகப் போராடும் மாவோயிஸ்டுகளுக்கு அவர்கள் உறுதியாக காலூன்றியிருக்கும் பகுதிகளிலுள்ள ஆதிவாசி, தலித்களின் ஆதரவு மிக அதிகம். தீவிரவாதிகள், பயங்கரவாதிகளால் நாட்டில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களை விட மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள தாக்குதல்கள் அதிகம் என கணக்குகள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு எவ்வளவு தான் முயற்சித்தாலும் அதில் முழு வெற்றியை இதுவரை அடைந்து கொள்ள இயலவில்லை. ஆதிவாசிகளின் அமோக ஆதரவு மாவோயிஸ்டுகளுக்கு இருப்பதும் அதற்கு ஒரு காரணமாகும்.
மாவோயிஸ்டுகள் வலுவாகவுள்ள மாநிலமான மேற்குவங்கத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், "மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க மாட்டோம். அதே சமயம் மாநில காவல்துறையினரும் துணை ராணுவ படையினரும் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்" என்று அறிவித்துள்ளார். அத்துடன், "மாவோயிஸ்டுகளுக்கும் மேற்கு வங்காள அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்" என பகிரங்கமாக மாவோயிஸ்டுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கும் மாவோயிஸ்டுகள் விஷயத்தில் இவ்வளவு கவனமாக அணுகும் உள்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பே, மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் எந்த அளவுக்கு மக்களிடையே வலுவாக உள்ளது என்பது உதாரணமாகும்.
தீவிரவாதிகளை விட அதிக தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் நாட்டில் நடத்தியிருந்தாலும் ஆதிவாசி மக்களின் அமோக ஆதரவு அவர்களுக்கு இருக்கும் நிலையில், வெறுமனே பயங்கரவாதி-தீவிரவாதிகளின் பட்டியலில் மாவோயிஸ்டுகளை ஒதுக்கி அவர்களை அவ்வளவு எளிதில் ஒடுக்கி விட முடியாது.
ஆதிவாசி மக்களின் உரிமைக்காக தன்னலமின்றி கடுமையான போராட்ட களத்தில் நிற்கும் மாவோயிஸ்டுகளின் உறுதியினை, பிரபல மனித உரிமை போராளி டீஸ்தா செட்டால்வஸ்ட் சமீபத்தில் அவர்களுடனே காடுகளில் தங்கி நேரில் கண்டறிந்து எழுதியுள்ளார். ஆதிவாசி மக்களின் பன்முகப் பிரச்சனைகளையும் ஆழமாக வெளிப்படுத்தும் அவரின் அந்த அறிக்கையை அரசு கண்டுகொள்ளாமல் தள்ளிவிட முடியாது.
ஆதிவாசிகளின் சமூகப் பிரச்சினைக்காக என்று கூறி அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியுள்ள மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது மட்டுமே இலட்சியம் என்ற ரீதியில் அணுகியில் நிச்சயம் அது தீர்வாக ஆகாது.
"மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் அவர்களது ஆயுத வன்முறை என்பது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையோ அல்லது இராணுவப் பிரச்சினையோ அல்ல" என்றும் "அது ஒரு சமூக அரசியல் பிரச்சினை" என்றும் கூறுகிறார் அமைச்சரவை செயலகப் பாதுகாப்புத்துறையின் தலைவராக இருந்த ஆர் சுவாமிநாதன்.
"மாவோயிஸ்டுகளை இராணுவத்தைக் கொண்டோ அல்லது காவல்துறையினரைக் கொண்டோ எதிகொள்வது தவறு. மாவோயிஸ்டுகள் செயற்படும் பகுதிகளில் இருக்கும் ஆதிவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகளை அரசியல் ரீதியாக அணுகுவதே தேவையான செயற்பாடு" என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
மனித உரிமை போராளி டீஸ்தாவின் கண்ணோட்டமும் இதே ரீதியிலேயே அமைந்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். "பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும் ஆதிவாசி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் அளிக்க முடியாத நிலையில், அதற்கு மாற்றாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுக்க தவறும் பட்சத்தில் மாவோயிஸ்ட்களின் வன்முறைகள் மேலும் கூடவே செய்யும்" என்றும் சுவாமிநாதன் சுட்டிக்காட்டுகிறார்.
"தீவிரவாதிகளின் வன்முறைக்கும் மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கும் வித்தியாசம் உள்ளது என்று கூறும் அவர்களை சமாளிக்கும் நடவடிக்கையில் இராணுவம் அல்லது மாநில காவல்துறையினர் ஆகியோரை ஈடுபடுத்துவதில் ஏதும் பெரிய வித்தியாசம் இல்லை" என்றும் கருத்து வெளியிடுகிறார்.
"மாவோயிஸ்டுகளின் மீது நடவடிக்கை இல்லை" எனக் கூறும் உள்துறை அமைச்சர், "அவர்களை எதிர்கொள்ள காவல்துறை மற்றும் துணை இராணுவம் பயன்படுத்தப்படும்" என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. நாட்டின் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் பொறுப்பு காவல்துறைக்கு இருந்தாலும் மாவோயிஸ்டுகள் போன்று மக்கள் செல்வாக்குடன் ஆயுதப் போராட்டம் நடத்தும் பலம் வாய்ந்த குழுக்களை எதிர் கொள்ளும் அளவுக்குப் பயிற்சியோ, பலமோ, நவீன ஆயுதங்களோ காவல்துறைக்கு இல்லை என்பதை அதிகாரிகளும் அமைச்சர்களும் ஒன்று போல் மறந்து விடுகின்றனர்.
மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்த காவல்துறையினரின் எண்ணிக்கையை மட்டும் கணக்கெடுத்துப் பார்த்தாலே இப்பிரச்சினையின் வீரியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
இதையே, "ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள காவல்துறையினரை வைத்துக் கொண்டு மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் அதற்கு தேவையான ஆட்பலமோ, பயிற்சியோ, ஆயுதங்களோ மாநில காவல்துறையினரிடம் இல்லை" என்று சுவாமிநாதன் சுட்டிக்காட்டுகிறார்.
அரசுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத, பயங்கரவாத, ஆயுதப் போராளி குழுக்களை அடக்க வேண்டியது அரசின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம் அவ்வாறு ஆயுதம் எடுத்துள்ள குழுக்கள் அனைத்தையும் தீவிரவாதிகள்-பயங்கரவாதிகள் என ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதும் அவர்களின் யதார்த்த சக்தியை உணராமல் சட்டம், ஒழுங்கைக் காக்கும் சாதாரண காவல்துறையினை அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பயன்படுத்துவதும் ஒரு சிறந்த அரசின் சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.
ஆதிவாசிகள், பழங்குடியினர் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாவர். அவர்களுக்குரிய உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் சரியான முறையில் வழங்காமல் ஒரு நாட்டின் அரசு முன்னேற்றப் பாதையில் சீராக அடியெடுத்து வைக்கவும் இயலாது.
இதனை நன்றாக உள்வாங்கி மாவோயிஸ்டுகளின் பிரச்சனையில் உரிய தீர்வை எட்ட அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக முன்னேற்ற ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




