ஐபிஎல் 2010 தொடரின் லீக் போட்டிகள் நாளையுடன் முடியும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே அரை இறுதியில் நுழையும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளன.
அரை இறுதிக்கான மற்ற மூன்று இடங்களுக்கு ஐந்து அணிகள் போட்டி போட்டு வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அனைத்து லீக் போட்டிகளையும் ஆடி முடித்த நிலையில் 7 வெற்றி 7 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
சென்னை அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றாலும் கூட, டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் டெல்லி இடையிலான போட்டியில் தோல்வி பெறும் அணியை விட பெங்களூரு அணி சிறந்த ரன் ரேட்டில் இருப்பதால் பெங்களூரு அணிக்கு அரை இறுதி வாய்ப்பு சற்று அதிகம். இருப்பினும் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து அதிக ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெறுமானால் பெங்களூரு வெளியேற நேரிடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை அந்த அணி இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தினால் ரன் ரேட் அடிப்படையில் 14 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேற வாய்ப்புண்டு. தோல்வியுறும் பட்சத்தில் அரை இறுதி வாய்ப்பை இழக்க நேரிடும்.
இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். இன்றைய போட்டியில் சென்னை அணியும், நாளைய போட்டியில் கொல்கத்தா அணியும் தோல்வியுறும் நிலையில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் தோல்வியுற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறி விடும்.
கொல்கத்தா அணி, முன்னர் சொன்னது போல ஏதாவது அதிசயம் நிகழ்த்தி அதிக ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தினால் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி அரை இறுதிக்கு முன்னேற வழியுண்டு. எப்படியாயினும் இன்றைய இரு போட்டிகள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப் படுகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்பதே தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




