டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ௧௧ ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது டெக்கான் சார்ஜர்ஸ்.
முதலில் பேட் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட், சுமன் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மிஸ்ரா 25 ரன்கள் சேர்த்தார். சைமண்ட்ஸ் 30 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முன்னணி ஆட்டக் காரர்கள் ரன் குவிக்கத் தவறினர். வார்னர், சேவாக் , காம்பிர், தில்ஷான் மற்றும் கார்த்திக் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். காலிங்வுட் மட்டுமே நின்று விளையாடி ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் சேர்த்தார். கடைசி 5 ஓவரில் காலிங்வுட் மற்றும் நெஹ்ரா 48 ரன்கள் விளாசினார். டெல்லி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே சேர்த்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த தோல்வியின் மூலம் டெல்லி அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. வெற்றி பெற்ற டெக்கான் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடைசியாக தான் விளையாடிய 5 ஆட்டங்களில் வென்று இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




