இலங்கை: கொழும்பு வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கார் ஒன்றினுள் இருந்த பெண்ணின் குழந்தையைத் துப்பாக்கி முனையில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அந்தப் பெண்ணின் துணிச்சலால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றிய மேலும் விபரங்கள்;
அப்பகுதியிலுள்ள தனியார் டியூசன் வகுப்புக்குச் சென்ற மகளை அழைத்துச் செல்வதற்காக தாயொருவர் தனது கைக்குழந்தையுடன் காரில் வந்துள்ளார்.
வகுப்பு முடிவடைந்து மகள் வருவதை எதிர்பார்த்து இந்தப் பெண் காரில் பின் பகுதியில் தனது கைக் குழந்தையுடனிருந்த போது, அந்த வீதியில் ஆட்டோ ஒன்றிலிருந்து இதனை கவனித்துக் கொண்டிருந்த இருவர், திடீரென காரை நெருங்கிச் சென்று துப்பாக்கியை நீட்டி காருக்குள்ளிருந்த பெண்ணிடமிருந்த குழந்தையைப் பறிக்க முற்பட்டுள்ளனர்.
எனினும் அந்தப் பெண் குழந்தையைப் பாதுகாத்தவாறு காரின் மறுபக்கமாக நகர்ந்தவாறு அபயக் குரலெழுப்பியுள்ளார். அவர்களும் அக்குழந்தையைப் பறிக்க முற்பட்டும் அது சாத்தியப்படவில்லை.
தொடர்ந்தும் அபயக் குரலெழுப்பியவாறு பெண் குழந்தையைப் பாதுகாக்க, அப்பெண்ணின் குரல் கேட்டு அங்கு பலரும் வரவே, குழந்தையை அபகரிக்க முற்பட்ட இருவரும் முயற்சியை கைவிட்டு ஓடிச்சென்று தாங்கள் வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவம் பற்றி போலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சுமார் 40 நிமிடத்திற்குப் பின்னரே அவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.
இதேநேரம், கடத்தல்காரர்களிடமிருந்து தனது குழந்தையைப் பாதுகாத்த அந்தத் தமிழ் பெண்ணைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




