
பா.ம.க. மீண்டும் தி.மு.க. கூட்டணியில்.... 2011 பொதுத்தேர்தலுக்குப் பின் மாநிலங்கள் அவையில் ஒரு இடம் பா.ம.க,வுக்குக் கொடுக்கப்படும் என்று கருணாநிது கூறியிருப்பது பற்றி வணங்காமுடியின் கருத்தென்னவோ? -திராவிடமணி 
ஒரேயொரு இடத்திற்காக ராமதாஸ் வீறாப்பையும் விமர்சனத்தையும் கைவிட்டு, மீண்டும் கருணாநிதியிடம் மானங்கெட்ட சரணாகதி அடைந்திருக்கிறார். அவ்வோரிடமும் பசுமைத் தாயகத்துக்கா காடுவெட்டிக்கா என்பது அடுத்த சிக்கல். அந்த ஓர் இடத்திற்காக, 2011 பொதுத்தேர்தலில் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வர ராமதாஸும் பா.ம.க.வும் உழைக்க வேண்டும் என்ற பொறிக்குள் இப்போது ராமதாஸ்.
இருவருக்குமே வெட்கமில்லை.இதில் இவர்களுக்குத் தமிழ்க்குடிதாங்கி, தமிழினத் தலைவர் என்ற பட்டம் வேறு..
மேற்கு வங்கத்தில் பாஜ.க.காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க விரும்பியது பற்றிய வினாவுக்கு முன்னர் நாம் அளித்த விடையையும் காண்க!
கருணாநிதி, செம்மொழி மாநாடு நடத்த இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - தமிழ்ப்பித்தன்
மாநாட்டால் மொழி வளருமோ இல்லையோ.. கருணாநிதிக்கு நடக்கும் மற்றொரு பாராட்டுவிழாவாகவே, அம்மாநாடு அமையும் என்பதில் ஐயம் வேண்டாம்.
முத்துச்சாமி, சின்னச்சாமி போன்றோர் அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருப்பது சரியான செயலா? - வேணுகோபாலன்
அது அவர்களின் உட்கட்சிப் பூசல்.அக்கட்சித் தலைமை எடுக்கும் முடிவில் நாம் தலையிட முடியாது. ஆனால் தமிழ் நாட்டை ஆண்ட அக்கழகம், இன்று நல்லதொரு எதிர்க்கட்சியாகக் கூடச் செயல்பட முடியாமல் முடங்கிக் கிடப்பதை ஊடகவியலாளர் என்ற பொறுப்பில் நாம் விமர்சிக்க முடியும்.
முன்னர் ஓரிருமுறை அ.இ.அ.தி.மு .கழகம் பற்றிய வினாக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த விடைகளில், அக்கழகத்தின் தலைமையின் நடவடிக்கைகளால் அக்கழகம் தேய்ந்து கொண்டே வருவதைக் குறிப்பிட்டிருந்தோம்.
சின்னச்சாமி சொன்னதைப்போல கழகத்தின் அதிகார மையம் தவறுக்கு மேல் தவறுகளைச் செய்துகொண்டே போனால் 2011 தேர்தலில் பா.ம.க.வுக்கு தில்லி மேல்சபையில் ஓர் இடம் உறுதியாகிவிடும்.
செம்மொழிப் பாடல் கேட்டீர்களா? - அன்பழகன்
தமிழ் இசையோ தமிழிசைக் கருவிகளோ அதில் இல்லை. மேற்கத்திய பாணியில் செம்மொழி அறிமுகம்.. கருணாநிதியும் ரகுமானும் சேர்ந்து குதறிய பின்னும் தமிழ் வாழும் என்பதில் ஐயமில்லை.
டி,எம்.செல்வ கணபதி, கே.பி.ராமலிங்கம், தங்கவேலு ஆகியோருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டுள்ளதே? - ராஜா
கருணாநிதி, தம் கட்சிக்காரர்களை விட அதிமுக மதிமுக போன்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்குப் பதவிகளை வழங்குவதற்குத் தயங்காதவர். இன்று தமிழ்நாட்டிலும் தில்லி நடுவண் அரசிலும் அப்படிச் சிலர் அமைச்சர்களாக இருக்கின்றனரே?
இப்படிப் பதவிகள் வழங்குவதன் வாயிலாக மற்ற கட்சிகளின் தலைவர்களும் தம் கட்சிக்குவர ஆர்வமூட்டுகிறார் கருணாநிதி என்று எடுத்துக்கொள்ளலாம்.
கிராம அதிகாரி, துண தாசில்தார், சப் இன்ஸ்பெக்டர், ஜூனியர் எஞ்ஜினீயர் போன்ற கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீஸால் கைது செய்யப் படுகின்றனர். உயர் அதிகாரிகள் யாரும் லஞ்சம் வாங்குவதில்லை என்று எடுத்துக் கொள்லலாமா? - அப்பாஸ்
இது தொடர்பாய் நாம் சில விசாரணைகள் நடத்தியபோது பரிதாபக் கதைகள் வெளிவந்தன. ஒரு அமைச்சர், அல்லது -- டி,ஜி.பி. / ஐ.ஜி போல-- மாநில உயர் அதிகாரி, ஒரு பகுதிக்கு அரசு முறைப் பயணமாக வந்தாலும் கூட, அவரது பரிவாரங்களின் செலவுக்கு அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. அமைச்சர் அல்லது உயர் அதிகாரி எத்துறை சார்ந்தவரோ அத்துறையின் அதிகாரிகளே செலவு செய்ய வேண்டும்; மட்டுமின்றி அவர்களுக்கு அன்பளிப்பாகப் பொருட்களும் வழங்க வேண்டும் என்ற கேவல நடைமுறை உள்ளது.
சான்றுக்குச் சொன்னால், வருவாய்த்துறை அமைச்சர் வரும்போது மாவட்ட ஆட்சியர் , தமக்குக் கீழ் உள்ள கோட்ட அதிகாரியிடம் பொறுப்பை விடுவார். அவர் வட்டாட்சியரிடம் சொல்வார். அவர் தம் கைப்பணத்தைச் செலவிடுவாரா? தம் கீழ் உள்ள துணை வட்டாட்சியர், வருவாய் அதிகாரி,கிராம அலுவலர் ஆகியோரிடம் செலவுகளைப் பகிர்ந்தளிப்பார். அவர்கள் பொதுமக்களிடம் கைநீட்டுவர். செலவு போக மீந்திருப்பது அவர்களது பைக்குள்.
பொதுப்பணித்துறை அமைச்சரோ உயர் அதிகாரியோ வந்தால் அத்துறை பணிஒப்பந்தக்காரர்களிடம்(CONTRACTORS) செலவுப் பொறுப்பு ஒப்படைக்கப்படும். இப்படியே அனைத்துத் துறையிலும் நடக்கும்.
அலுவலர்கள் கட்டாய்த்தின்பேரில் கைநீட்டிப் பழகி விட்டதால் தொடர்ந்து கை நீட்டத் தயக்கம் ஏற்படுவதில்லை. இவையன்றிச் சில அலுவலர்களின் மனைவிகளின் நச்சரிப்பும் சிலரின் சின்ன வீட்டு ஆசைகளுக் கூட அவர்கள் லஞ்சம் வாங்கக் காரண்களாம்.
இதில் கீழ் நிலை அதிகாரிகள் மாட்டிக் கொள்கின்றனர்.
அதற்காக உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை எனக் கூற முடியாது. கேதன் தேசாய் போலக் கோடிகளில் வாங்குவோரும் உண்டு. எப்போதாவது மாட்டிக் கொள்வார்கள். RARE OF THE RAREST . ஆனால் தன்மானமுள்ள எம்மனிதனும் எலும்புத் துண்டுக்காகத் தன்னை நாயாக்கிக் கொள்ள மாட்டான்.
மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை இவ்வாண்டு இறுதிக்குள் வரும் எனச் சொல்கிறார்களே? - மார்க்கண்டன் 
உண்மைதான். மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் ஜோஸப் ஸ்டிக்ளிட்ஸ் (Joseph stiglitz) கூறியுள்ளார். 2007-ல் தொடங்கிய பொருளாதார மந்தநிலையில் பாதிப்படைந்த பெரும்பாலான நாடுகள் அதன் தாக்கத்திலிருந்து விடுபட 'புண்ணுக்கு மருந்து தடவுவது' போன்ற தற்காலிக நடவடிக்கைகளையே மேற்கொண்டன. மந்தநிலை ஏற்பட்டதற்கான அடிப்படைக் காரணிகள் கண்டறியப்பட்டு அவை 'அறுவை சிகிச்சை' மூலம் அகற்றப்படும் வரை இந்நிலை தொடரவே செய்யும். ஆனால், இந்தியா அதிகம் கவலைப்படத் தேவையில்லை. பொருளாதார மந்தநிலையின் முதற் கட்டத்தை வெகு சிறப்பாக சமாளித்த இந்தியாவிற்கு இன்னொரு மந்தநிலை பெரிய சவாலாக இருக்காது என பொருளியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பகுத்தறிவு மனிதனுக்கு மட்டுமே என்று சொல்கிறோம். ஆனால் விலங்கினங்கள் தம் குட்டிகளையும் இணைகளையும் சரியாகப் பகுத்தறிந்து அடையாளம் காண்கின்றனவே? - ப.சு.மணி - கோவில்பட்டி
மனிதன் பகுத்தறிவு படைத்தவன் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறோமே...ஆனால் அவனுக்கில்லாத ஆற்றலும் வல்லமையும் விலங்குகளுக்கு உண்டு. உடலில் இருந்து வெளிவரும் ஒருவகை மணத்தைத் தம் மோப்ப சக்தியால் உணர்ந்து, விலங்குகள் தம் இணையை, உறவை மட்டுமின்றி, நண்பர்களையும் எதிரிகளையும் எஜமானர்களையும் அடையாளம் கண்டு கொள்ளும் ஆற்றல் படைத்தவை.
நிலநடுக்கம், கடல்கோள் போன்ற இயற்கைச் சீற்றங்கள் வரும்போது விலங்குகள் அவற்றை உணர்ந்து கொள்ளும் வல்லமை பெற்றவை. எறும்பு இனம் மழைக்காலத்தை முன்னரே உணர்ந்து மேட்டுப் பகுதிக்கு இடப்பெயர்ச்சி செய்யும் என்பதயும் நாம் அறிந்துள்ளோமே!
யானையின் துதிக்கை அதன் மூக்கா, கையா?? - ஜோதிமீனா 
யானையின் தும்பிக்கை என்று நாம் சொல்லும் உறுப்பு யானையின் சுவாசக் குழாயாகவும் கையாகவும் பயன்படுகிறது. யானை உணவு உண்ணவும் நீர் குடிக்கவும், நீரைத் தன் மீது பீய்ச்சிக் கொள்ளவும், பொருட்களை எடுக்கவும் கையாகப் பயன்படும் தும்பிக்கை 15000தசைநார்ளைக் கொண்டது அதன் முனையில் ஒரு விரல் உண்டு .அதைக் கொண்டு மிகச் சிறிய பொருளையும் கூட யானை எடுத்துவிடும். ஆப்பிரிக்க யானைக்குத் தும்பிக்கையின் முனையில் இரு விரல்கள் உள்ளன.
திருடன் வீட்டில் திருட்டுப்போனால் அவனின் மனநிலை எப்படி இருக்கும்? - வைத்தியலிங்கம்
'திருடனுக்குத் தேள்கொட்டியதை' விட அதிக வலி ஏற்படும். தன் வீட்டில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளையும் திருடப்பட்ட முறைகளையும் நன்கு அறிந்து கொள்வான்.. பிற இடங்களில் தான் திருடுவதற்கு வழிகாட்டியாய்......
தன் வீட்டில் திருடிய திரு.டனாரைத் தேடுவான் தன் குருவாக ஏற்றுக் கொள்ள :-)
| கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும். |

| < முந்தையது | அடுத்தது > |
|---|




