இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் தமிழக அரசு

E-mail அச்செடுக்க
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை நிர்ணயம் செய்ய தமிழக அரசு, நீதிபதி கோவிந்த ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் கட்டணம் மற்றும் செலவு ஆகிய விபரங்களைக் கேட்டறிந்து, தமிழகத்தில் உள்ள 10,934 தனியார் பள்ளிகளுக்கும் அவற்றின் செலவுகளுக்கு ஏற்பத் தனித் தனியாக கட்டணம் நிர்ணயம் செய்து அந்தந்தப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி வைத்தது.

ஆய்வுக்குழுவின் பரிந்துரைபடி, 5ஆம் வகுப்பு வரை ரூ. 5000 வரையிலும், 8ஆம் வகுப்பு வரை ரூ. 8000 வரையிலும், 10 ஆம் வகுப்பு வரை ரூ. 9000 வரையிலும், 12 ஆம் வகுப்புவரை ரூ. 11000 வரையிலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தனியார் பள்ளிகளுக்கு 15 நாட்கள் அவகாசமும் கட்டண நிர்ணய குழு அளித்தது.

நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கட்டண நிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாத தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, "தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "தனியார் பள்ளிகளின் கட்டணங்களை நிர்ணயம் செய்ய அரசுகளுக்கு முழு அதிகாரம் உண்டு" என்று தீர்ப்பளித்தார். உச்சநீதிமன்றமும் கட்டண நிர்ணய குழுவின் பரிந்துரையை உறுதிபடுத்தும் வகையில் தீர்ப்பு கூறி விட்ட நிலையில், வழக்கில் தோற்றுப் போன தனியார் பள்ளி நிர்வாகிகள் பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று மிரட்டிப் பார்த்தனர். பதிலாக, அரசு விடுத்த கடுமையான எச்சரிக்கை அவர்களைப் பின்வாங்க செய்தது.

கோடைவிடுமுறை முடிந்து ஒரு வழியாக பள்ளிகள் திறக்கப் பட்டுள்ள நிலையில், சட்டரீதியான யுத்தத்தில் தனியார் பள்ளிகள் அரசிடம் தோற்றுப் போயிருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பையும் சட்டை செய்யாமல், அரசு நிர்ணயித்த கல்வி கட்டண வரம்பை மீறி வழக்கம் போல பெற்றோர்களிடம் வசூல் வேட்டையைத் தொடர்ந்து வருகின்றன. பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருதி வாய் திறக்காமல் பள்ளிகள் கூறும் கட்டணங்களைக் கட்டி விட்டு வந்து விடுகின்றனர். சிலர் தைரியத்துடன் எதிர்த்துக் கேட்டாலும் "விருப்பம் இருந்தால் உங்கள் குழந்தைகளைச் சேருங்கள்; இல்லா விட்டால் மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்குச் செல்லுங்கள்" என்ற திமிர்த்தனமான பதிலே பல தனியார் பள்ளிகளிடமிருந்து கிடைக்கிறது.

தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு அதிகமாக வசூலிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், எதையும் கண்டு கொள்ளாமல் தங்கள் விருப்பம் போல் சீருடை, புத்தகக் கட்டணம், பெற்றோர் ஆசிரியர் கழகம் எனப் பல்வேறு பெயர்களில் தனியார் பள்ளிகள் வசூல் வேட்டையை நடத்தி வருகின்றன.

இவ்வாறு அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது பொதுமக்கள், சென்னை கல்லூரி சாலையில் அமைந்து இருக்கும் தனியார் கல்வி கட்டண நிர்ணய குழுவிடம் புகார் கொடுத்தால், அதன்மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அரசு அறிவித்துள்ள போதிலும் அவ்வாறு வரும் புகார்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்வி குறியே!

சமீபத்தில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கப் படடுவதாக எழுந்த புகாரை அடுத்து பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு வாரியத் தலைவர் ஒருவர் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் அப்பள்ளி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பி வந்துள்ளனர்.

அரசே நியமித்த குழுவின் பரிந்துரைக்கு அதிகமாக தனியார் பள்ளிகள் வசூல் வேட்டை நடத்துவதற்கு எதிராக தமிழக அரசும் வாய் திறக்காமல் மௌனியாக இருப்பது, தமிழக அரசின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் கல்வி கட்டண நிர்ணயம், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் பணம் கறப்பதற்கான அரசியல்வாதிகளின் புதிய யுக்தியாகக் கூட இருக்கலாம் என்ற அச்சமும் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளை விடத் தனியார் பள்ளிகளின் கல்வித்தரமும் பள்ளி வசதியும் மெச்சத்தகுந்த விதத்தில் இருப்பதாலேயே, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருதிப் பணத்தைப் பார்க்காமல் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்குப் படையெடுக்கின்றனர். அதனை நன்றாக உணர்ந்துள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள், தரமான கல்வி என்ற தாரக மந்திரத்தை மூலதனமாகக் கொண்டுப் பணவேட்டையை ஜரூராக நடத்துகின்றனர்.

இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், அரசால் நியமிக்கப்பட்ட கட்டண நிர்ணய பரிந்துரை குழு, தனியார் பள்ளிகளின் வரவு, செலவுகளைக் குறித்தக் கணக்குகளை அவர்களிடமிருந்து வாங்கி, அதன் அடிப்படையிலேயே பள்ளிகளுக்கு இழப்பு ஏற்படாத வகையில் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. பலப் பள்ளிகள், வருமானவரித்துறையை ஏய்ப்பதற்காக குறைந்த வரவு கணக்கைக் கொடுத்ததால், அதற்கேற்பவே கட்டணமும் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இரண்டும் கெட்டான் நிலையில் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே பெரும்பாலான பள்ளிகள் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளன என்ற பேச்சும் பரவலாக அடிபடுகிறது.

கல்வி, சேவை என்ற நிலைமாறி லாபம் கொழிக்கும் ஒரு சிறந்த வணிகம் என்ற மனநிலை தனியார் முதலாளிகளிடம் வந்துள்ள நிலையில், தமிழக அரசு பிள்ளையையும் கிள்ளிவிட்டுக் கொண்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையைச் செய்யாமல் எவருக்கும் பாதகமின்றிப் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அளவுக்கு மீறி அநியாயமாக கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாகும்.
கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: radha, June 11, 2010
அரசின் நிலையினை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளது சிறப்பானதாக உள்ளது.இதுபோன்ற அரிய நல்ல விஷயங்களை இந்நேரம்.காம்-ல் வெளியடவும் எல்லோருக்கும் பயனுடையதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்