
(பல்துலக்காத) விலங்குகளுக்கு வாய் துர்நாற்றம் இருக்குமா? - பல்லவி
மனிதர்களுக்கு வாயிலிருந்து அடிக்கும் துர்நாற்றம் அவனது உணவுப் பழக்கத்தாலும் வாயில் சுரக்கும் பல என்சைம்களாலும் தான். விலங்குகள் உண்ணும் உணவுக்கேற்ப அவற்றின் பல் அமைப்பு இருக்கின்றன. அதனால் வாயில் உணவு சிக்கி துர்நாற்றம் அடிக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவே எனலாம்.
ஐ.மு.கூ. அரசின் இரண்டாவது முதலாண்டு எப்படி? - சசி குமார்
வினா சற்றுக் குழப்பமாக உள்ளது. இரண்டாம் முறை ஆட்சியைப் பிடித்த ஐ.மு.கூ அரசின் ஓராண்டுச் செயல்பாடு பற்றி வினவியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
பொருளாதாரத்தில் வளர்ச்சி என்பது அறிக்கைகளில் மட்டும்தான்.
மாவோயிஸ்ட்களை வெல்ல நினைத்துக் காவல்படையை அனுப்பியும் சிக்கல் தொடர்கிறது.
விலைவாசி கட்டுமீறிவிட்டது. வரவுக்கும் செலவுக்கும் இடையில் பெரும் இடைவெளியை வைத்துக் கொண்டு வாழும் சராசரி இந்தியனிடம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதைப் பெரும் சாதனையாகச் சொல்ல முடியாது
பொருளாதார மந்த நிலையிலும் இந்தியா சற்றுத் தாக்குப் பிடித்ததை மன்மோகன்சிங் அரசின் சாதனையாகச் சொல்லலாம்.
சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா? - வேலன் 
யாரும் வரலாம். யார் வந்தாலும் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போவதில்லை.
ரஜினி அரசியலுக்கு வந்தால், குஷ்பூவைப் போல ஆளும் கட்சியில் சேர்ந்தால் பலன் உண்டு.
தனிக் கட்சி என்று சென்றால் பத்தோடு பதினொன்று என உதிரியாக இருக்கலாம்.
அரசு நடத்தும் சர்வகட்சிக் கூட்டத்துக்கு அழைப்பிதழ் வரும்; அவ்வளவுதான்.
விஜயகாந்த் கட்சிகூட இப்போது நல்ல நிலையில் இல்லை.
முல்லைப் பெரியாறு பிரச்னை எப்போதுதான் தீரும்? - அழகன்
குறுகிய மாநில / மொழி வெறியையும் வாக்குவங்கி அரசியலையும் ஒதுக்கிவைத்து விட்டு மக்கள் நலனை மட்டும் முன் வைத்து இரு அரசுகளும் இணைந்து முடிவெடுத்தால் தீரும்.
குருடைப் போக்கும் குருவைக் கொள்ளாது குருட்டுக் குருவைக் கொண்டு குருடும் குருடும் குருட்டாட்டமாடி குருட்டில் வீழ்ந்தனர் - யாருக்கு இது தற்போது பொருந்தும்? - உவைஸ்
ஜார்கண்டில் பாஜ.கவுக்கும் சிபுசோரனுக்கும் பொருந்தும்.
நிறத்தைப் பார்த்து மனிதர்களை எடை போடும் நிலை எப்போது மாறும்? - அன்பு
நிறம்? தோலைச் சொல்கிறீர்களா?
அந்த நிலை எப்போதோ மாறிவிட்டது.
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பறங்கியைத் துரை என்ற காலமும் போச்சே!
இப்போது பணம், பதவி, இரண்டு மட்டும்தான் எடை போடப் பயன்படுகின்றன..

ஒரு புறம் கிரிக்கெட் போட்டிகளில் கோடி கோடியாய் லாபம் என்கின்றனர்..இன்னொரு புறம் ஆப்ரிக்க நாடுகளை விட வறுமையில் வாடும் மக்கள், தற்கொலை செய்யும் விவசாயிகள்...இந்தியாவில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு எந்த கட்சியும் முன்வருவதில்லையே...ஏன்? - பிரபா
கிரிக்கெட் போட்டிகளில் வரும் கோடி கோடி லாபம் அரசுக்கு வருவதில்லை. மற்ற தொழில்கள் செய்து லாபம் ஈட்டுவதைப் போலவே கிரிக்கெட் விளையாட்டும் ஒரு தொழில் அவ்வளவே! வறுமையும் ஏழ்மையும் இந்தியாவில் மட்டும் இல்லை; உலகைல் வளர்ந்துவிட்ட நாடுகளிலும் இது உள்ளது.
நாம் வாழும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால் ஊடகங்களில் இவை பேசப்படுகின்றன. பல நாடுகளில் இவை பேசப்படாததால் நமக்குத் தெரிவதில்லை.
முப்பது கோடி மக்களாக இருந்தபோது இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் இருந்ததைவிட இப்போது மேம்பட்டுள்ளது.
மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வை எந்தக்கட்சியும் போக்க முடியாது.
அப்படி சொல்லி வாக்குக் கேட்போர் அறிந்துகொண்டே மக்களை ஏமாற்றுவோராவர்.
யாருடைய பதில்கள் தங்களுக்கு பிடிக்கும் - அரசு, மதன், ஜூனியர், அந்துமணி? - ராகவ்
அரசு - நகைச்சுவை இழையோட, சுவாரஸ்யமான பல செய்திகளைத் தந்ததால்... மதன் - நமது கண்ணில் சட்டெனத் தட்டுப்படாத பல அறிவியல் தகவல்களைத் தருவதால்..
மனிதநேய மக்கள் கட்சி குறித்து உங்கள் கருத்து? - முகமது முஸ்தபா
பெரும்பாலும் முஸ்லிம்கள் மட்டுமே நிறைந்துள்ள, புதிதாகத் துவங்கப்பட்ட கட்சி. கட்சி துவங்கிய உடன் நடந்த தேர்தலில் வலிமையான ஆளும்கட்சி வேட்பாளாரை எதிர்த்துப் போட்டியிட்டது, அக்கட்சி மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் தொண்டர்களின் ஆர்வத்தையும் வெளிக்காட்டினாலும் அரசியல் அனுபவக்குறைவு வெளிப்பட்டது என்னவோ உண்மை.
ஆண் மற்றும் பெண் திருமணம் செய்யத் தகுதியான வயது என்ன? - முகமது முஸ்தபா
தகுதி என்பது அவரவர் உடல் மற்றும் உள்ள நிலைகளைப் பொறுத்தது. ஆணோ பெண்ணோ பருவமடைந்தவுடன் உடலுறவுக்குத் தகுந்தவர்களாகி விடுவர். ஆனால் உடலுறவுக்கும் அப்பால், வாழ்க்கையை நடத்திச் செல்லும் அறிவும் அனுபவமும் பெறுவது தகுதியாகும். அத்தகுதி வயதால் மட்டும் வந்துவிடாது. வருவாய் ஈட்டல், கருவுறுதல், குழந்தை பெறல், வளர்த்தல் போன்ற பொறுப்புகளைச் சுமக்கும் ஆற்றல் தேவை.
அது வந்துவிட்டால் மணம் புரிந்து வாழத் தடையில்லை. நம் முன்னோர் காலத்தில் இதுவே நடைமுறை.
ஆனால் இன்று நம் அரசு ஆணுக்கு 21 வயது பெண்ணுக்கு 18 வயது எனக் கூறுகிறது.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சரி ஆண்கள் அழகானவர்களா? இல்லை பெண்கள் அழகானவர்களா? - முகமது முஸ்தபா
அழகு என்பது பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்து வேறுபடும். "BEAUTY LIES ON THE BEHOLDER'S EYES" என்பதைக் கேள்விப்பட்டதில்லையா? பொதுவே ஆணின் கண்களுக்குப் பெண் அழகு; பெண்ணின் கண்களுக்கு ஆண் அழகு.அதனால்தான் ஒருவரை மற்றவர் ஈர்த்துக் காதலிப்பதும் கூடி வாழ்வதும் நடைபெறுகிறது.
இப்படி அமைந்த இயற்கையால்தான் மனித குலம் வாழ்கிறது; வளர்கிறது.
இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு சமுதாயங்களும் போராட்டம் நடத்தும் போது, பெற்ற இட ஒதுக்கீட்டை கிறிஸ்தவ சமுதாயம் புறம் தள்ளியதன் காரணம் என்ன? - ஜமாலுதீன்
கருணாநிதி முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்கும் கொடுத்தது தனி இடஒதுக்கீடன்று. பிற்படுத்தப்பட்டோரின் இடத்தில் உள் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். கிருத்துவர்கள் கருணாநிதி ஒதுக்கியதை விட அதிக இடங்களை முன்னர் பெற்றிருந்தனர். அதனால் இடஒதுக்கீட்டு முறை அவர்களுக்கு இழப்பைத் தந்ததால் அதைப் புறந்தள்ளினர். முஸ்லிம்கள் இந்த விளையாட்டைத் தாமதமாகப் புரிந்துகொண்டு விழிக்கின்றனர்.
| கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும். |

| < முந்தையது | அடுத்தது > |
|---|




