இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை உயர்த்த கோவிந்தராஜன் கமிட்டி முடிவு?

E-mail அச்செடுக்க
தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை அதிகரிக்க நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு வசதி, அமைந்துள்ள இடம் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயித்து அரசுக்கு பரிந்துரை வழங்கியது.

அதன் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு வெவ்வேறு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்யவும் தனியார் பள்ளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரை செய்த கட்டணம் போதாது என்றும் அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் கட்டணத்தை உயர்த்துமாறு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியிடம் மேல்முறையீடு செய்தன.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. ஒருசில இடங்களில் பெற்றோரே நேரடியாக போராட்டத்தில் குதித்தனர். சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தனியார் பள்ளிகளிடமிருந்து வந்த மேல்முறையீட்டு மனுக்கள் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பள்ளிகளில், தற்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. இதைத்தொடர்ந்து, கட்டணத்தை 30 சதவீதம் அதிகரிக்கலாமா? என்று நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

இதற்கிடையே, அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களும் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இயக்குனர் பி.மணி செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை அன்று தெரிவித்தார்.

அதிகக் கட்டணம் தொடர்பாக வந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த மாதத்திற்குள் விரிவான அறிக்கை தருமாறு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்