இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (22-06-2010)

E-mail அச்செடுக்க

 

 

 

இன்றைய சூழ்நிலையில் உலகத் தமிழ் மாநாடு தேவையா? - வேதா ராமன்

கோவையில், ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கருணாநிதியின் தனிப்பட்ட விருப்பத்தால் நடத்தப்படுகின்றது.

ஜப்பான் நாட்டுப் பேராசிரியர் நொபுரு கரஷிமாவைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழறிஞர்களால் இயக்கப்படும் உலகத் தமிழாய்வுக் கழகம்தான் உலகத்தமிழ் மாநாடு நடத்தும் உரிமை படைத்தது.

உலகத் தமிழாய்வுக் கழகம், உலகத் தமிழ் மாநாடு நடத்த மறுக்கவில்லை; ஆனால் கருணாநிதியின் நெருக்கடிக்கேற்ப, அவர் விரும்பிய நாட்களில் விரைந்து நடத்த விரும்பவில்லை. உலகத் தமிழாய்வுக் கழகத்தின் மற்ற பொறுப்பாளர்களின் ஒத்துழைப்புடன் உலகத்தமிழ் மாநாடு நடத்த எண்ணிய கருணாநிதியின் திட்டம் வெற்றி பெறாமல் போக, உலகத் தமிழ் அறிஞர்கள் தம் ஆளுகைக்கு உட்பட்டவர்களோ தம் தாளத்துக்கொப்ப ஆடுகிறவர்களோ அல்லர் என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி, "உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு" எனப் பெயர் மாற்றினார்.

செம்மொழி மாநாட்டைத் தமிழ்ப் பல்கலைக் கழகமோ அல்லது அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளோ இணைந்து நடத்துவதுதான் பொருத்தம். பிற மொழிக்கலப்பின்றித் தமிழை எழுதவோ பேசவோ அறிந்திராத கருணாநிதி, .தமிழுக்குச் சேவை செய்ய வேண்டும், தமிழை வளர்க்க வேண்டும் என்பதையெல்லாம் விட, உலகத் தமிழர் நடுவே சரிந்திருக்கும் தம் மதிப்பையும் பெயரையும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாயிலாக மீண்டும் பெறவும் தம் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெறச் செய்யவுமே மாநாடு நடத்தும் முயற்சியில் இறங்கினார் என்பதே பொதுவான கருத்து.

கருணாநிதியோ அல்லது பிறரோ, எவர் முயற்சியாயினும் யாதன் பொருட்டாயினும் இன்று செம்மொழித் தமிழுக்கென கோவையில் மாநாடு துவங்கியுள்ளது.

உலகில் விளங்கும் உயர்தனிச் செம்மொழிகள் ஆறு. தமிழ், அரபு, சீனம், ஸமஸ்க்ருதம், கிரேக்கம் மற்றும் இலத்தீன் ஆகியவையே அவை.

சிலர் பாரசீக மொழியையும் ஹீப்ரு மொழியையும் செம்மொழிகள் வரிசையில் சேர்ப்பர். அம்மொழிகளையும் செம்மொழி என ஏற்றுக் கொள்வதில் நமக்கு மறுப்பில்லை.

ஒரு மொழியின் தொன்மை, அதன் இலக்கண இலக்கிய வளம், அதன் கலை, பண்பாடு போன்றவற்றை நோக்கியே செம்மொழித் தகுதி குறிக்கப்படும்.

தமிழ், அரபு, சீனம் ஆகிய மூன்றும் கோடிக்கணக்கானோரின் நாவில் நாடோறும் தவழ்ந்து, உரையிலும் எழுத்திலும் வாழும் மொழிகளாம்.

ஸம்ஸ்க்ருதம், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மூன்றும் உரையாடலின்றி இறந்த மொழிகளாம்.

வாழும் மொழியான தமிழை, இந்திய அரசு செம்மொழி என்று ஏற்றுக் கொண்டதாய் அறிவித்திருந்தாலும் செத்த மொழி ஸம்ஸ்க்ருதத்துக்கு இணையாக ஏற்கவில்லை. அரசு ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதில் கோடானுகோடித் தமிழர்களுக்கு ஐயமில்லை.


தமிழ் செம்மொழி எங்கள் உயிர்மொழி என்று கூறும் அரசியல்வாதிள் மெட்ரிகுலேசன் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது ஏன்? - ராதா

தமிழைப் பிழையின்றி, ஒழுங்காகப் பேசவோ எழுதவோ தெரியாத இந்த அரசியல் வணிகர்கள் தமிழ்நாட்டையும் தமிழ்ச் சமூகத்தையும் சீரழிக்கும் முன்பே தமிழ் செம்மொழியாகத்தான் இருந்து வருகிறது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இவர்கள் எதுவும் செய்ததில்லை. செம்மொழி மாநாடு கூடச் சில அரசியல் நெருக்கடிகளால்தான் நடத்தப்படுகிறது.

தமிழ்ப் புலவர்களுக்குச் சிலைகள் எழுப்பியதாலோ, வள்ளுவர் கோட்டம் உருவாக்கியதாலோ, கம்பனுக்கும் பாரதிக்கும் மணிமண்டபம் கட்டியதாலோ கன்னியாகுமரிக் கடலில் வள்ளுவருக்குச் சிலை நிறுவியதாலோ தமிழ் மொழி வளர்ந்து விடவில்லை; வளரவும் முடியாது. இவை பொதுமக்கள் பணத்தில் தம் பெயர் நிலைப்பதற்காக அரசியல் வணிகர்களால் செய்யப்பட்டவை. அதனால்தான் தமிழ் மொழிக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் உருப்படியாக எதையும் செய்திராத அவர்களால் இவற்றை மட்டுமே தமிழுக்குச் செய்த தொண்டுகள் எனப் பல மேடைகளில் அடிக்கடிச் சொல்லிக்காட்ட முடிகின்றது.

தமிழ்த் தாத்தா என அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சா., அவரது ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தொடங்கி இன்றைய மணவை முஸ்தபா, இணையத்திற்கென யூனிகோடு தமிழ் எழுத்துரு உருவாக்கிய அதிரை உமர்தம்பி வரை, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக் கழகங்களின் தமிழ்த்துறைகளிலும் எம்ஜிஆர் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் தமிழாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களும் பட்டத்திற்காகவன்றித் தாம் தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழாய்வு செய்தோரும் உட்பட அறிஞர்கள் தம் உழைப்பாலும் சிந்தனையாலும் செய்த தொண்டுகள்தாம் தமிழின் வாழ்விற்கும் வளார்ச்சிக்கும் துணை நிற்பன.

மொழி எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவி. தாய் மொழியைச் சற்று அதிகம் நேசிப்பதிலோ அதை வெளிக்காட்டுவதிலோ மொழியை வளர்க்க முயல்வதிலோ தவறில்லை.அதற்காகத் “தமிழ் உயிர்" என்று சொல்வதெல்லாம் மிகை.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என அடுக்கு மொழி வசனம் பேசி, இனம், மொழி எனத் தம் அரசியல் வாழ்வுக்காக உணர்ச்சிகளைத் தூண்டி விடும் அரசியல்வாதிகள் தம் பிள்ளைகளை மட்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்து, ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளைக் கற்க வைத்து அரசிலும் அரசியலிலும் உயர்நிலைக்குக் கொண்டு வருவதையும் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தமிழ் இளைஞர்கள் தம்மை நம்பி இருந்தோரை ஆதரவற்றவர்களாகத் தவிக்க விடுவதையும் நாம் கண்டு கொண்டிருக்கிறோமே?

உணர்ச்சிகளை அறிவின் கட்டுப்பாட்டுக்குள் வைத்தால் வாழ்வில் தொல்லைகள் குறையும்.

உங்களின் அடுத்த வினாவுக்கும் இதில் விடை இருக்கிறது.


எங்கும் எதிலும் தமிழ் என்று கூறிக்கொண்டு இருக்கும் அரசாங்கம் ஏன் தமிழ் ஆசிரியர்களைப் பணி அமர்த்துவதில்லை? மேலும் எங்கு (பள்ளியில்)சென்றாலும் தமிழ் ஆசிரியர்களை தேர்வு செய்யாதது ஏன்? - ராதா

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்புக் குறித்து நீங்கள் வினவியுள்ளீர்கள்.

உங்கள் வினா தமிழாசிரியர்கள் குறித்தா அல்லது தமிழ் வழியில் (TAMIL MEDIUM) கற்பிக்கும் ஆசிரியர்கள் குறித்தா எனத் தெளிவாக இல்லை.

தமிழாசிரியர்கள் என்றால் தமிழ் மொழி மட்டுமே கற்பிக்கும் ஆசிரியர்களாவர்.

நடுவண் அரசின் பாடப்பிரிவு, மாநில அரசின் பாடப்பிரிவு என இரு வகையில் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் இயங்குகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் / பெறாத் தனியார் பள்ளிகளில் ஒரு நாள் எட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றால், மொத்தம் உள்ள பாடங்களில் ‘முதல்மொழி'ப் பாடம் நாள்தோறும் ஒரு வகுப்பு மட்டுமே நடைபெறும். தமிழ் நாட்டுப் பள்ளிகளில் ‘முதல்மொழி'ப் பாடமாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுகு, உர்தூ, ஸம்ஸ்க்ருதம், ஃப்ரெஞ்ச் போன்ற மொழிகளுள் ஏதாவதொன்று கற்பிக்கப்படுகின்றது.

ஆங்கிலம், கணிதம், வரலாறு மற்றும் புவியியல், அறிவியல் எனப் பிற வகுப்புகள் அமையும். இரு நாட்கள் மட்டும் ஒரு பாடத்திற்கு இரு வகுப்புகள் நடைபெறும். இப்படி எல்லாப் பாடங்களுக்கும் முறையாக வகுப்புகள் பிரித்துக் கொடுக்கப்படும். விளையாட்டு / உடற்பயிற்சிக்கும் வகுப்புகள் ஒதுக்கப்படும். இரு வகுப்புகளுக்கும் சில பள்ளிகளில் ஒரே ஆசிரியரே பாடம் நடத்துவார். எனவே தேவைக்கு மேல் தமிழாசிரியர்களைப் பள்ளிகளில் பணிக்கு அமர்த்தும் வாய்ப்பு இல்லை.

உங்கள் வினா, தமிழ் வழியில் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் குறித்தானது என்றால், அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் தமிழ் வழிக் கல்வியே கற்பிக்கப்படுவதால் குறிப்பிட்ட அளவு பணி வாய்ப்புக் கிடைக்கிறதே!

தவிர, இன்று இந்தியாவில் தமிழ் மட்டுமின்றி, மலையாளம்,கன்னட, தெலுகு, உர்தூ, ஸம்ஸ்க்ருதம், ஆங்கில மொழிப் பட்டதாரிகளின் நிலையும் கணினி, அறிவியல், பொருளியல், வணிகவியல், வரலாறு மற்றும் அறிவியல் போன்ற பிற பாடங்களைப் படித்த பட்டதாரிகளின் நிலையும் இதுவே.

முதுகலைப் பட்டத்துடன் மேலாய்வுப் பட்டமும் (M .Phil) பெற்று, அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர் சம்பளத்தைவிடக் குறைவாக ஊதியம் பெற்றுக் கொண்டு, தனியார் மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஏராளமான பட்டதாரிகளின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

ஆசிரியர் பணி உயர்வானதுதான். ஆனால் அதற்காகக் காத்திருந்து நொந்து போவதை விட, இதர பணிகளைச் செய்வது குறைவானதும் இல்லை.

ஏன் அரசை மட்டுமே நம்பி இருக்கிறீர்கள்? நீங்கள் தமிழ் படித்தால் அரசுப் பள்ளிகளில் பணி உறுதி என எந்த வாக்குறுதியையும் அரசு தரவில்லையே?

விரும்பியது கிடைக்காவிடின் கிடைத்ததை விரும்பி ஏற்றுக் கொள்வதுதான் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல உதவும்; அதுவே அறிவுடையோர் செயல்.


"மெல்லத் தமிழ் இனிச் சாகுமோ?" - அப்பாஸ்

வாசகர் அப்பாஸின் இக்கேள்விக்கான பதில் விரிவாக பதியப்பட்டுள்ளது. இங்கே சென்று வாசிக்கவும்.


கருணாநிதி, கோபாலபுரம் வீட்டை மருத்துவமனைக்காகக் கொடுத்ததை விஜயகாந்தும் ஜெயலலிதாவும் குறைகூறி உள்ளது பற்றி வணங்காமுடியின் கருத்து என்ன? - விஜய்

1955 ஆம் ஆண்டு சரபேஸ்வர அய்யர் என்பவரிடமிருந்து கருணாநிதியால் விலைக்கு வாங்கப்பட்ட கோபாலபுரம் வீட்டை, அவர் தம் மக்களான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோருக்கு வழங்கினார். அவர் தம் வீட்டை மருத்துவமனைக்காக வழங்கப்போவதாக அறிவித்த பின் மகன்கள் மூவரும் கருணாநிதிக்கே அதைத் திருப்பி அளித்தனர்.

கருணாநிதி, தம் தாயார் அஞ்சுகம் அம்மையார் பெயரில் அமைத்துள்ள அறக்கட்டளைக்கு அவ்வீட்டைக் கொடுத்துள்ளாரே தவிர அரசுக்குக் கொடுக்கவில்லை.. அவ்வறக்கட்டளை கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய ஆ.ராசா, வைரமுத்து, தொழிலதிபர் கெவின்கேர் சி.கே.ரங்கநாதன், இராம.நாராயணன், எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோரைக் கொண்டதாகும். இதில் ஜெயலலிதாவோ விஜயகாந்தோ கருணாநிதியைக் குறை கூற எவ்வித உரிமையும் இல்லை.

தமக்கென ஒரு குடும்பமோ குழந்தையோ இல்லாததால் தமிழக மக்களுக்காகவே வாழ்கிறேன் எனக் கூறும் ஜெயலலிதா, தம் போயஸ் தோட்ட வீட்டைத் தம் பெயராலோ அல்லது தம் தாய் பெயராலோ இதுபோல் பொது நலனுக்குக் கொடுக்கட்டுமே? மக்கள் மனதில் அவர் என்றும் வாழ அது நல்ல வாய்ப்பாகும்.

தமக்கென இருந்த கட்டிடத்தையும் இழந்ததால் விஜயகாந்த் இவ்வாறு குறை கூறுகிறாரோ என்னவோ?


முடி வளர என்ன செய்ய வேண்டும்? முடி உதிர்வைத் தடுப்பது எப்படி? - சிவப்பி

வணங்காமுடி எனப் பெயர் இருப்பதால் முடி பற்றிய வினா வந்துள்ளது போலும்....

வணங்காமுடி உதிர்வதில்லை என்பதால் நமக்கு அதுபற்றிய சிந்தனையோ கவலையோ இல்லை.

எனவே வினாவை மருத்துவ இதழ்களுக்கோ தளங்களுக்கோ அனுப்பவும்.



கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்