"மெல்லத் தமிழ் இனிச் சாகுமோ?" வணங்காமுடி பதில்கள் பகுதிக்கு வாசகர் அப்பாஸ் என்பவர் எழுதி அனுப்பிய கேள்வி இது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி அவரது இக்கேள்வியும் அதற்கான வணங்காமுடியாரின் விடையும் தனியாகத் தரப்படுகிறது. (ஆசிரியர்)ஒரு மொழி வாழ்வது நாவிலும் நடையிலும் (பேச்சிலும் எழுத்திலும்) ஆகும்.
மொழியைச் சிதைக்காமல், பிறமொழியைக் கலக்காமல் பேசியும் எழுதியும் தான் ஒரு மொழியை அதன் தொன்மைத் தன்மையுடன் வாழ வைக்க முடியும். புதுப்புது அறிவியல் கண்டுபிடிப்புகளால் அறிமுகப்படுத்தப்படும் பொறிகள், ஊர்திகள், பொருட்கள் போன்றவற்றிற்கும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய பொருட்கள், காய், கனிகள் போன்றவற்றிற்கும் புதிய கலைச்சொற்களை உருவாக்க வேண்டும். புதிய சொற்கள் உருவாக்கப்படும் வரை வடசொல் / திசைச்சொல் இலக்கண அடிப்படையில் பெயர்களைப் பயன்படுத்தலாம்.
ஆனால் தமிழ்மொழி பேசுகிறோம் என்ற பெயரில், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை அளவிறந்து பயன்படுத்துவதன் வாயிலாய் வளரும் தலைமுறை, மொழியின் இயற்கையையும் அதன் தொன்மையையும் அறியாமல், கலப்படத் தமிழைத் தம் உரையில் பயன்படுத்துவர். ஃபேஸ் வாஷ் பண்ணி, பஸ்ஸுக்கு வெயிட் பண்னி, க்லாஸ் அட்டண்ட் பண்ணித் தமிழ்மொழி சிதைக்கப்படுகிறது.
அதுபோலவே ஒலிச்சிதைவும் மொழியைக் கொன்றுவிடும் ஆபத்து உள்ளது.
தமிழ் மொழியில் பன்னிரண்டு உயிரெழுத்துகளும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் உள்ளன.
அப்பதினெட்டு மெய்களில்
க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற ஆறும் வல்லினம்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன், ஆறெழுத்துகளும் மெல்லினம்.
ய்,ர்,ல்,வ்,ழ்,ள், எனும் ஆறு எழுத்துகளும் இடையினம்.
தமிழ்மொழியில் இவ்வெழுத்துகள் எவ்விதம் பிறக்கின்றன என்பதைக் குறிக்கும் இலக்கணம் உள்ளது.
தொல்காப்பியத்தில் "பிறப்பியல்" இதுகுறித்துப் பேசுகிறது.
உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சிலும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறு இயல என்பது நூற்பா!
தற்போதைய தொலைக்காட்சிகளில் செய்தி படிப்போரும் நிகழ்ச்சித் தொகுப்போரும் நெடுந்தொடர் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் உரையாடுவோரும் பாடுவோரும் தமிழ் மொழியைச் சிதைக்கின்றனர்.
லகர, ழகர, ளகர, ரகர, றகர வேறுபாடின்றி ஒலிகின்றனர்.
நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.
நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்
வல்லினத்தில் க என்பதை"GA என வெடிப்பொலியாக்கி ஒலிக்கின்றனர்.
GIணறு GUதிரை.GUனிந்து GEட்டி எனக்கூறுகின்றனர்.
ப எனும் எழுத்தை எனBA ஒலிக்கின்றனர்.
சான்றுக்கு:- பம்பரம் என்பதை BAம்பரம் என்கின்றனர்,
பல்லி என்பதைப் BAல்லி என்கின்றனர்
ச என்பதை "ஸ்ஸ" என ஒலிக்கின்றனர்.
திரைப்படத்திலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் உரையாடுவோரும் செய்திகள் படிப்போரும் நிகழ்ச்சித் தொகுப்பாளார்களும் அறிவிப்பாளர்களும் "ச்" எனும் வல்லின எழுத்து, தமிழ் மொழியில் இருப்பதையே மறந்துவிட்டனரோ என எண்ணத்தக்க முறையில் ஒலிக்கின்றனர்.
சான்றுக்கு:-
சட்டி, சட்டை, சங்கு, சட்டம், சாலை, சாவு, சாப்பிடு, சிலை, சிலம்பு, சிரிப்பு, சிவப்பு, சிற்றெறும்பு, செங்கரும்பு, செந்தமிழ், செத்துப்போ, சென்னை, செல்வம், செல்வி, செலவு செய், சேவல், சேலை, சுட்டு, சொல், சொல்லவா, சொல்கிறாய் என்பன போன்று வல்லினம் "ச" வரும் இடங்களில் எல்லாம் “ஸ்ஸ" என ஒலிக்கின்றனர்.
ஸ்ஸட்டி, ஸ்ஸட்டை, ஸ்ஸங்கு, ஸ்ஸட்டம், ஸ்ஸாலை, ஸ்ஸாவு, ஸ்ஸாப்பிடு, ஸ்ஸிலை, ஸ்ஸிலம்பு, ஸ்ஸிரிப்பு, ஸ்ஸிவப்பு, ஸ்ஸிற்றெறும்பு, ஸ்ஸெந்தமிழ், ஸ்ஸெத்துப்போ, ஸ்ஸென்னை ஸ்ஸெல்வம், ஸ்ஸெல்வி, ஸெலவு ஸெய், ஸ்ஸேலை, ஸ்ஸேவல், ஸ்ஸுட்டு, ஸ்ஸொல், ஸ்ஸொல்லவா, ஸ்ஸொல்கிறாய் என்பன போன்று ஒலித்துக் கொல்கின்றனர்.
ச பிறப்பதை “சகார ஞகாரம் இடை நா அண்ணம்" என்கிறார் தொல்காப்பியர்.
ஆனால் இவர்கள் ஸ்ஸ என ஒலிப்பது தமிழ் இலக்கணத்தையே கொச்சைப்படுத்துவதாகும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஸவுந்தரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.ஸுசீலா, எஸ் ஜானகி, மனோ, இயேசுதாஸ், எஸ்.பி.பாலஸுப்ரஹ்மணியம், சித்ரா, மின்மினி போன்றோர் தமிழ் எழுத்துகளைச் சரியாக ஒலித்தனர்; ஒலிக்கின்றனர்.
"சட்டி சுட்டதடா ..."
“சொல்லடா வாய் திறந்து அம்மா என்று...."
"செந்தூரப்பூவே.."
"சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதிதெரியுமா.."
"சின்ன சின்ன ஆசை.."
"சின்னச் சின்ன மூக்குத்தியாம் சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்" போன்ற, சான்றுக்கு எடுத்தாண்ட இப்பாடல்களில் வல்லின "ச" எழுத்து சரியாக ஒலிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் மொழியைச் சிதைக்கின்றனர்.
"வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே" என்ற பழைய பாடலை மறுபதிப்புச் செய்து பாடும் பாடகன் "வச்சுக்கவா உன்னெ மட்டும் நெஞ்சுக்கு"ல்லே" என்று பாடுகிறான்.
அதே பாடலில் செங்கரும்புச் சாறு, சிற்றெறும்பு என வருமிடங்களில் "ஸ்ஸெங்கரும்பு ஸ்ஸாரு, ஸ்ஸிற்றெறும்பு" எனப் பாடுகிறான்.
"சீவ வேண்டும் கலயற மனஸை சீப்பு நீதான் வா.." என்ற பாடல், பாடுவோனின் நாச்சறுக்கலில்,
"ஸ்ஸீவவேணும் கலயற மனஸெ ஸ்ஸீப்பு நீதான் வா" என ஒலிக்கிறது
சட்டெனச் சொல்லு சட்டெனச் சொல்லு
சூரியனோ சந்திரனோ என்ற பாடலை
“ஸ்ஸட்டெனஸ் ஸொல்லு ஸ்ஸட்டெனஸ் ஸொல்லு" என்று பாடுகின்றனர்..
“சென்னைஸ் ஸெந்தமிழ் மறந்தேன்" என ஒருவன் பாடுகிறான்.
"அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே
மலையோரச் சாரலிலே எனை மார்போடு சேர்த்தவளே" என்ற இனிமையான பாடலைப் பாடுபவன்,
அடியோடு ஸ்ஸாய்த்தவளே மலையோரஸ்ஸாரலிலே மார்போடு ஸ்ஸாய்த்தவளே எனச் சிதைக்கிறான்.
சேவலோடகொண்ட போலச் செவந்திருக்குது ஒதடு என்ற பாடலைப் பாடும் பாடகன்,
"ஸ்ஸேவலோட கொண்ட போல ஸ்ஸெவந்திருக்குது ஒதடு" என்று வல்லினத்தைச் சிதைக்கிறான்.
செம்மொழி மாநாட்டுக்காகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி எழுதிய பாடலைக் கூட "ஸ்ஸ்ஸெம்மொழியான தமிழ் மொழியே" என்றுதான் பாடகர் ஏ.ஆர்.ரகுமான் ஒலிக்கிறார்.
கருணாநிதி,செம்மொழிப் பாடலை எழுதி இசையமைக்க ரகுமானிடம் கொடுக்கும்போதே அதைச் சிதைக்காமல் பாடவும் வேண்டியிருக்க வேண்டும்.
இந்தி மொழிப் பாடலைப் பாடும் தமிழ்ப் பாடகன் அம்மொழியின் வல்லின எழுத்து "ச"வைச் சரியாக் ஒலிக்கிறான்.
"மேரே ஸாம்னே வாலே கிடிக்கி மே
ஏக் சாந்த் கா துக்டா திக்தா ஹை" எனப் பாடுகிறன்.
சந்தா ஹை தூ மேரா ஸூரஜ் ஹை தூ" எனப் பிழையின்றி, ஒலிச்சிதைவின்றிப் பாடுகிறாள் தமிழ்ப் பாடகி.
சாக்லேட், சான்ஸ், சார்ஜ், சாட்டிங், சாப்டர், சிம்ணி, சில்வெதர், சீஸ், செஸ், சேஞ்ச், சேஸிங் போன்ற "ச" ஒலியில் துவங்கும் எண்ணற்ற ஆங்கிலச் சொற்களைப் பிசகின்றி ஒலிப்போர் தமிழ் வல்லின "ச"வை மட்டும் "ஸ்ஸ" ஆக்குவதேன்?
தாம் அணியும் உடைகளில் கசங்கலோ சுருக்கமோ இல்லாமல் அக்கறையுடன் உடுத்திக் கொள்வோர் தமிழ்மொழியைக் கசக்கிச் சுருக்கிச் சிதைப்பதேன்.
தமிழ் கேட்பாரற்றுவிட்டதா?
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
என்ற நம்பிக்கையா?
நாவில் வாழ்ந்தால்தான் அது வாழும் மொழி.
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை மறந்துவிட வேண்டாம்
மெல்லத்தமிழினி சாகும் என்றந்தப் பேதை உரைத்ததை மெய்ப்பித்திட வேண்டாம். செம்மொழியைச் சிதைத்திட வேண்டாம் என்று இந்தப் பேதைகளை நோக்கிக் கேட்டுக்கொள்வோம்.
கருத்துக்கள் (2)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|





இன்றிரா ஸன்செய்திகள் பார்த்தேன்.
மாநாட்டு உணவு ஏற்பாடு பற்றிப் புகழ்ந்த செய்திக்குப்பின், பார்வையாளர்கள் முன் ஒலிவாங்கி நீட்டப்படது.
ஒரு பெண் , " முப்பது ரூபாய்க்கு food, water,chips எல்லாம் தந்தாங்க. sweetடும் தந்தாங்க" எனச் செம்மொழியில் கருத்துரைத்தார்.
அதன் பின் உணவக மேலாளர் , "நேற்று functionலெ அறுபதாயிரம் பேருக்கு supply செய்தோம்; இன்று நாற்பதாயிரம் பேருக்கு supply" எனச் சொன்னார்.
இது கரு.வின் குற்றமோ மாநாட்டின் குற்றமோ இல்லை. மக்கள் இன்னும் ஆங்கிலக் கலப்பின்றித் தமிழ் பேசக் கற்கவில்லை; அல்லது முயலவில்லை என்பதையே காட்டுகிறது.
செம்மொழி மாநாட்டுக்குப் பிறாகாவது மொழியைச் சிதைக்காமல் பேசுவரா?