சில ஆண்டுகளுக்கு முன்னர் தென் தமிழக மாவட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார். அந்தக் கொலை வழக்கில் கல்வித் தந்தை (!) என்று பெயர் சூட்டப்பட்டவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப் பட்டதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்குத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரின் கொலைக்கான காரணம் ஜாதிப் பிரச்சனையோ, கொடுக்கல் வாங்கல் பிரச்சனையோ அல்லது குடும்ப பிரச்சனையோ அல்ல.கொலை செய்யப் பட்டவர், கொலைக்குப் பின்னணியில் இருந்த முக்கிய குற்றவாளி என இருவருமே பொறியியல் கல்லூரிகளுக்குச் சொந்தக்காரர்கள். கல்வித் தந்தை(!)யின் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு காரணமாக அக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டதன் பேரில், கல்வித் தந்தை(!)யின் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவர்களில் பலர், முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் சேர்ந்தனர். அது கல்வித் தந்தை(!)க்குக் கோபத்தை ஏற்படுத்தியதே அமைச்சரின் கொலையில் சென்று முடிந்தது.
அதைப் போன்று தற்போதும் மற்றொரு கொலை நடந்துள்ளது. மதுரவாயலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.டெக் படித்து வந்த வட இந்திய மாணவர் நிர்பைகுமார்சிங் தன் சக மாணவ நண்பரான பங்கஜ்குமாருடன், நீலாங்கரையில் உள்ள நண்பரின் வீட்டுக்கு ஞாயிற்றுக் கிழமை இரவு சென்றுள்ளார். நீலாங்கரை சென்று விட்டு திரும்பிய இருவரையும் ஒரு கும்பல் வழிமறித்து கடுமையாக தாக்கி காயப் படுத்திய நிலையில் இருவரும் அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நிர்பை குமார்சிங் திங்கள் கிழமை காலை உயிரிழந்தார். இவரது தந்தை ராஞ்சியிலுள்ள ரெயில்வே துறையில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.
மாணவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. தொடக்கத்தில் குறிப்பிட்ட கொலைக்கும் இந்தக் கொலைக்கும் உள்ள ஒற்றுமை கல்வியின் பெயரால் நடைபெறும் வியாபாரம். வட இந்தியாவில் இருந்து தமிழக கல்லூரிகளில் வந்து சேரும் மாணவர்கள், தங்கள் படிப்பை மட்டும் பார்க்காமல் தன் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் அட்மிசன் வாங்கி கொடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து கமிசன் பெற்று, அதைத் தனி தொழிலாக நடத்தி வந்துள்ளதும் மாணவர்களை வைத்தே தனியார் கல்லூரிகள் நடத்திய தொழிலும் இந்தக் கொலையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜார்கண்டைச் சேர்ந்த வட இந்திய மாணவர் ஒருவரைத் தான் படிக்கும் எம்.ஜி.ஆர் பொறியியல் பல்கலைக் கழகத்தில் சேர்த்து விட நினைத்துள்ளார் நிர்பைகுமார்சிங். அதற்குள் சஞ்சீவ் சிங் என்ற மாணவர் தான் படிக்கும் சத்தியபாமா பொறியியல் கல்லூரியில் அந்த மாணவருக்கு அட்மிசன் வாங்கிக் கொடுக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் சஞ்சீவ் சிங்கும் அவரது நண்பர்களும் இணைந்தே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் இது போன்றே கமிசன் தகராறில் வட இந்திய மாநில ஆட்சியர் ஒருவரின் மகன் கடத்தப் பட்டு காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்டிருக்கும் நிலையில் மீண்டும் அதே போன்ற காரணத்தை முன்னிட்டு ஒரு கொலை நடந்து இருப்பது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி, ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் நல்ல பழக்கவழக்கங்களையும் போதிக்கும் நிலை மாறி பணம் ஒன்றே பிரதானம் என நிலையை அனைவரின் மனதிலும் விதைக்கும் நிலைக்கு மாறி வெகு காலம் ஆகிவிட்டது. இந்த நிலை இனியும் தொடருமானால் கற்றவர்களை விட கல்லாதவர்களே பரவாயில்லை என்ற நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. "ஆலயம் செய்வோம், கல்விச்சாலைகள் செய்வோம்" என்றான் பாரதி...இப்போது இருந்திருந்தால் "கல்விச்சாலைகள் செய்வோம் - பக்கத்திலே காயத்தை ஆற்றுவதற்கு மருத்துவமனைகள் செய்வோம்" என்றிருப்பானோ என்று நினைக்கும் அளவுக்குக் காசு மயமாக கல்வித்துறை ஆகிவிட்டது.
கல்வி சேவை என்ற நிலை மாறி, அது நட்டமில்லா நல்ல வியாபாரம் என்ற நிலை சமூகத்தில் நிலவி வருவது இது போன்ற சம்பவங்களால் கண்கூடாகத் தெரிகிறது. மேலும் மது, மாது என படிக்கும் காலத்தில் உல்லாசமாகத் திரிந்து கெட்டுப் போகும் மாணவர்களை, சரியான வழிக்குச் சீர்திருத்த வேண்டிய கடமையுள்ள கல்லூரி நிர்வாகங்கள் அதற்கு மாற்றமாக அவர்களை மேலும் சீரழிக்கும் விதத்தில் அவர்களின் தேவைக்கான பணத்துக்கு ஒரு மாற்று வழியாக இத்தரகு வேலையைச் செய்யப் பயன்படுத்திக் கொள்கின்றன. தங்கள் வயிற்றை நிரப்ப மாணவர்களின் எதிர்காலத்தையும் சீரழிக்கும் இத்தகைய பணமுதலைகள் "கல்வித்தந்தை" என்ற பெயர்களில் வேறு அழைக்கப்படுவது வெட்கக்கேடு!
கியூபா போன்ற சமீபத்தில் சுதந்திரமடைந்த நாடு முதல், உள்நாட்டுப் போரில் சிக்கி அல்லல்படும் பக்கத்திலுள்ள இலங்கை வரை, ஆரம்பப் படிப்பு முதல் கல்லூரி வரை இலவசமாக படிக்க வழிவகை செய்து தருகிறது. வீட்டுக்கு வீடு இலவச தொலைக்காட்சி எனவும் இலவச வேட்டிச்சேலைகள் எனவும் மக்களைப் பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்க உதவும் இலவசங்களை மக்கள் வரிப்பணத்தின் மூலம் வாரியிறைத்து ஓட்டு அரசியல் நடத்தி வரும் ஆளும் அரசுகள், உண்மையிலேயே நாட்டின் மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்டது எனில், கல்லூரி படிப்பு வரை கல்வியை இலவசமாக வழங்க முன்வரலாம். மக்கள் வயிற்றில் அடித்து ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்களாகவும் சகோதரியுடன் கோடிகளில் குளித்து உல்லாச வலம் வரும் பாவங்களுக்கும் சிறுபரிகாரமாகவாவது ஆகும்.
அதைச் செய்ய மனமில்லையேல் குறைந்தபட்சம், ஆளும் அரசுகள் இனியும் தாமதிக்காமல் இது போன்று கொள்ளை அடிக்கும் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் மீது கடுமையான நடவைக்கை எடுக்கவாவது முன்வர வேண்டும்.
குற்றங்கள் நிகழும்போது மட்டும் சில நடவடிக்கைகள் என மாறி குற்றங்களை முழுமையாக தடுப்பதற்கு அரசு முயல வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி அநியாயங்கள், நியாயங்களாவதும் நியாயங்கள் அநியாயங்களாவதும் நிறுத்தப்பட வேண்டும்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (2)

எழுதியவர்: Jahangeer, July 07, 2010
ஒவ்வொரு வருடமும் இது போல் நடந்து கொண்டு தான் இருக்கின்றது, இதனை தடுக்க கல்லூரிகள் எந்த அளவு முயற்சி எடுக்கின்றன என்பது பற்றி தெரியவில்லை, அரசு கல்லூரி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாலே தவிர இப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை.
எழுதியவர்: JEEVA, July 22, 2010
Edducation had become a business long back. There is no point in lamenting now. The one and only solution is asking the students to pay the fees directly to the govenment for the students who seek admission in a college in management quota. For Be./B.Tech, Govenment has fixed the fee as Rs.62500/- But in reality, thhose colleges are collecting 3 to 10 lakhs in addition to the management fee. This is an open secret. No body takes any action, because all these edcucational institutes/universities are run by politicians of ruling and opposition parties. They never take any initiative to prevent this kind of looting as it is directly affect them. If people join to gether and decide not to apply for engineering/medical studies, these dirty politicians will start begging the people of India to pursue studies in their institutes/universities.
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




