

அயல் நாட்டுப் பத்திரிகைகளில் தமிழகத்தின் தொழில்துறை சாதனை வந்திருந்தாலும் மக்களின் அடிப்படை பிரச்சனை இன்னமும் கேவலமாக இருக்கிறதே? ஒரு அரசாங்கத்திற்கு சாதனை என்பதன் அளவுகோல் தான் என்ன? - நூருத்தீன்
வெளிச்சம்போட்டு விளம்பரப்படுத்தப்படத்தக்கத் திட்டங்களும் செயல்களும் மட்டுமே அரசியல்வாதிகளுக்குத் தம் அரசின் சாதனையாகும் . அவற்றைக்கூறியே மீண்டும் வாக்குகள் சேகரிக்க முடியும். வாக்களிக்கச் செல்ல விரும்பாத மேல்தட்டு மற்றும் உயர்நடுத்தர வகுப்பு மக்கள் வசிக்கும் நகரங்கள் பெருவளர்ச்சி பெற்று மேம்பாலங்களாகவும் பறக்கும் ரயில்களாகவும் புதுக்கருக்கு மாறாத பேருந்துகள் ஓடும் பளபள சாலைகளாகவும் பட்டப்பகல்போல் இரவு ஒளிர விளக்குகள் எரியும் தூயவெண்மணல் கடற்கரைகளாகவும் சாதனைப் பட்டியலில் இடம்பெறும்போது, வாக்குச்சாவடிகளில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள் விடுதலை பெற்று 63 ஆண்டுகளாகியும் தம் அடிப்படைத் தேவைகளான பாதுக்காகப்பட்ட குடிநீர், சாலைப் போக்குவரத்து வசதி, மின்சாரம்.உணவுப்பொருள் பங்கீடு, சுகாதாரம், ஆரம்பக் கல்வி போன்றவற்றைப் பெறுவதற்காகப் போராடிக்கொண்டே இருக்க வேண்டிய நிலையிலேயே இந்தியா உள்ளது.
மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தடையின்றிக் கொடுப்பதே உண்மையான ஒரு மக்கள் அரசின் சாதனையாகும்.

தமிழகத்திலும் தற்போது அற்ப காரணங்களுக்காக குடும்ப வன்முறைகள், விவாகரத்து அதிகரித்து உள்ளது குறித்து வணங்காமுடியாரின் கருத்து ? - மல்லிகை
"தமிழகத்திலும்" என்று வினவியிருப்பதில் இருந்து இந்தியாவில் பொதுவாக இவை நிகழ்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். தமிழ்நாடு விதிவிலக்கன்று. பொருளாதாரத்தைப் பெருக்குவது மட்டுமே வாழ்வின் வெற்றி என்று மக்கள் கருதும் வாழ்க்கைச்சூழல் வளர்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் ஆசைகள் பெருகப்பெருகத் தேவைகள் பெருகுகின்றன. அடிப்படைத் தேவைகளுக்கும் மேல் ஆடம்பரத்தேவைகள் பெருகும்போது அவற்றுக்கானப் பொருளாதாரம் தேவைப்படுகிறது. அதைப் பெருக்க ஓடும் ஓட்டத்தில் காதல், கனிவு, பாசம், மனிதநேயம் எல்லாம் காலின்கீழ் போடப்பட்டு மிதிக்கப்படுகின்றன. குடும்பத்தில் இருவரும் வருவாய் ஈட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பெண் பொருளாதார விடுதலை பெறும்போது கணவனின் கட்டுப்பாட்டை வெறுக்கும் நிலை ஏற்படுகிறது. “வினையே ஆடவர்க்குயிரே இல்லுறை மகளிர்க் காடவர் உயிரே” என்பது மறந்து போகிறது. இதனால் நீங்கள் வினவியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
இதைக்களைய, ஆசைகளையும் தேவைகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர் பார்த்து வியக்க ஆடம்பரமாக வாழ நினைக்காமல் அடுத்தவர் பார்த்து வியக்க அன்போடும் ஒற்றுமையோடும் வாழ நினைக்கவேண்டும்.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் பின்னணியில் சங்கபரிவாரம் செயல்பட்ட உண்மையைக் கார்கரே வெளிக்கொண்டு வந்ததன் பின்னர், கோவா, அஜ்மீர், ஹைதராபாத் என பல குண்டு வெடிப்புகளிலும் சங்கபரிவாரத்துக்குத் தொடர்பு உள்ளதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளதே? - அப்துல் ரகுமான்
பக்கச்சார்பின்றி, அரசியல் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காமல் துணிவுடன் செயல்படும் நேர்மையான அதிகாரிகள் தம் கடமைக்கு மட்டும் கட்டுப்பட்டு விசாரித்தால் ஒளிந்துகொண்டிருக்கும் உண்மைகளும் தொடர்புடைய குற்றவாளிகளும் வெளியே வருவர் என்பதற்கு இவை சான்றுகளாகும். இந்தியாவில் நேர்மையற்ற சில காவல் கறுப்பாடுகளும் பொறுப்பற்ற ஊடகங்களும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தியதற்குப் பொறுப்பாவர்.பத்துப் பன்னிரண்டாண்டுகள் சிறையில் கழித்துவிட்டுப் பின்னர் குற்றமற்றவர் என விடுதலையான நூற்றுக்கணக்கானோர் இதற்குச் சான்றாவர்.
உலகில் மொழிகள் பலவாறாக பலவிதமாக பேசப்பட்டாலும் செயல்கள் அனைத்தும் ஒன்றே. மொழிகளில் காணக்கிடைக்கும் வினைச்சொற்கள் தோராயமாக எத்தனை என்பதை கணக்கிட முடியமா? - முனோ
முடியுமே! எளிதான செயல்தான்.
அதற்கென நேரம் ஒதுக்கி ஆய்வு செய்யும் மொழியியலார் இதைக் கணக்கிடமுடியும்.

மாவோயிஸ்டுகளின் கோரிக்கை என்ன? அவர்கள் அட்டூழியம் புரிவது ஏன்? - அழகு
மேற்கு வங்கமாநிலம் நந்திகிராமில் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக மக்கள் போராடினர். அரசு அடக்குமுறையைக் கையாண்டது.ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு எதிராகச் சிலநாட்களுக்கு முன் மக்கள் போராட்டம் நடத்தினர்.அரசு அடக்குமுறையைக் கையாண்டது.
இதுபோன்று மக்கள் நடத்தும் போராட்டங்களில் மாவோயிஸ்டுகள் அரசுக்கெதிராக மக்களை ஒருங்கிணைத்துப் போராடுகின்றனர்.
ஒதுக்கப்பட்ட மலைவாழ் பழங்குடி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணிக்கும் அரசுகள் அம்மக்களின் மண்ணைச் சுரண்டி வளங்களைக் கொள்ளையடிக்கும் போது அவர்களுக்காகப் போராடுவதாக மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். அவர்களை ஒடுக்க அரசு முயலும்போது எதிர்வினையாக அவர்கள் வன்முறையைக் கையில் எடுக்கின்றனர். அட்டூழியம் என்பது அவர்களின் எதிர்வினை. அதனால் பொதுமக்களின் உயிரும் உடைமையும் இழப்புக்குள்ளாகின்றன என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.
அப்பாவிப் பொதுமக்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் வன்முறையால் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட எடுபடாமல் போய்விடுகிறது.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்குத் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியான நிலையில், செய்தி வெளியிட்ட தொலைகாட்சி அலுவலகம் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளால் அடித்து தகர்க்கப்பட்டது பற்றி? - அல்அமீன்
இது ஒன்றும் புதுமையான செய்தியில்லை. கருத்துச் சுதந்திரம் என்பது இவர்களுக்குப் பிடிக்காத ஒன்றாகும் என்பதற்குச் சமீபத்திய சான்று, முகமதலிஜின்னா பற்றி ஜஸ்வந்த்ஸிங் எழுதிய நூலுக்கு இவர்கள் காட்டிய எதிர்ப்பு. மிகச்சமீபத்திய சான்று சிவாஜி பற்றி எழுதப்பட்ட நூலுக்கு மகாராஷ்டிராவில் காட்டப்பட்ட எதிர்ப்பு. சற்றுப் பழைய சான்று ஓவியர் எம். எஃப் உசேனின் ஓவியக்கண்காட்சியைச் சிதைத்தது. தேசப்பிதா என்றும் மகாத்மா என்றும் பெரும்பானமை இந்திய மக்களால் மதிக்கப்படும் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவைப் புகழ்ந்து விழா எடுக்கும் இவர்களுக்கு மட்டும் இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் உண்டு.வேறு யாருக்கும் கிடையாது.
| கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும். |

| < முந்தையது | அடுத்தது > |
|---|




