தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கலைக்கப்பட்டு புதிதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.வணிகர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் பேரவையின் தலைவர் வெள்ளையன் நீக்கப்பட்டதாகவும்
இன்று காமராஜ் அரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.புதிய அமைப்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மாநிலத் தலைவராக ஏ.எம்.விக்கிரமராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக கே.மோகன், பொருளாளராக அரிகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*தற்காலிகமாக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட த.வெள்ளையன் பேரவை விதிகளுக்கும் வணிகர்களின் நலனுக்கும் முற்றிலும் முரணாக தொடர்ந்து செயல்பட்ட காரணத்தால் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்குவது என ஏகமனதாக பொதுக்குழு தீர்மானிக்கிறது.
கடந்த 5 ஆண்டாக வெள்ளையன் பேரவை நோக்கத்திற்கும், விதிகளுக்கும் மாறாக செயல்பட்டு பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழுவுக்கு கட்டுப்படாமல் எதேச்சதிகாரமாக தொடர்ந்து செயல்பட்டார்.
பொருளாளர் கவனத்துக்கு வராமல் வரவு-செலவுகளை தானே கையாண்டார்.
வெள்ளையன் சங்க பதிவு சட்ட திட்டங்களுக்கும், விதிகளுக்கும் உட்பட்டு செயல்படாததோடு அறிக்கை ஆவணங்களை பதிவு சட்டத்தில் தாக்கல் செய்யவில்லை. இதனால் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையை பதிவு சட்டம் பிரிபு 41-ன்படி இன்று கலைத்து விட தீர்மானிக்கிறது.
* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மதுரையில் நடந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்ட தீர்மானங்களையும், திருச்சியில் நடந்த பேரவை சீரமைப்பு உயர்நிலைக்குழு கூட்ட தீர்மானங்களையும் பொதுக்குழு ஏகமனதாக ஏற்கிறது.
* அனைத்து வணிகர்களுக்கும் பாதுகாப்பு அரணாக செயல்படும் விதத்தில் புதிய வணிக அமைப்பை தொடங்குவது என இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.
* சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க கூடாது, சரக்கு சேவை வரியை இந்தியா முழுவதும் உள்ள வணிகர் சங்கங்களை அழைத்து பேசிய பின்னர்தான் அமுல்படுத்த வேண்டும்.
*உணவு தர பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தும் முன்பு எல்லோரையும் அழைத்து பேச வேண்டும். வணிகர் நல வாரியத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




