விமான ஊழியர்களால் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு வகையான வேலை நிறுத்தங்களால் ஏர் இந்தியா விமான நிறுவனமும், ஜெட் ஏர்வேஸூம் சுமார் 127 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக விமான துறை அமைச்சர் பிரபுல் படேல் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
இதில் சுமார் 77 கோடி ரூபாய் ஏர் இந்தியா நிறுவனமும், 50 கோடி ரூபாய் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் நஷ்டம் அடைந்துள்ளதாக, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்தார். வேலை நிறுத்தங்கள் இனி மேலும் நடக்காமல் இருப்பதற்காகவும், ஊழியர்களின் குறைகளை அறிந்து, முறையான நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும், அமைச்சகத்தில் மனித வள உயர்நிலை குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம் சென்ற ஆண்டில் சுமார் 5400 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. ஒரு கட்டத்தில் ஊழியர்களின் சம்பளம் வழங்க போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில், மத்திய அரசு சுமார் 2000 கோடி ரூபாய் மான்யம் வழங்கியுள்ளது.நஷ்டத்தில் இயங்குவதன் காரணம் குறித்து விளக்கிய அமைச்சர், விமான எரி பொருள் விலை உயர்வு, பொருளாதார மந்தம் மற்றும் குறைவான பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றால் நஷ்டம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




