மதுரை: மதுரை அருகே சோழவந்தான் என்னும் இடத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பாட்டில்கள் காணாமல் போன விவகாரத்தில் மு.க.அழகிரிக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், இது பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பாட்டில்கள் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திருடு போயிருப்பது குறித்து கொடுக்கப்பட்ட புகாரை காவல்துறை வாங்க மறுத்ததன் மூலம், தமிழ்நாட்டில் வழிப்பறிக் கொள்ளையர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனக்கு சொந்தமான சரக்கு லாரி ஒன்றில் கடந்த 4.7.2010 அன்று அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து ஹார்லிக்ஸ் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில் உள்ள திருவாலயநல்லூரில் உள்ள கிடங்கிற்கு 12.7.2010 அன்று வந்ததாகவும், வெளியில் நிறுத்தி வைத்த லாரியில் காலையில் எழுந்து பார்த்தபோது ஹார்லிக்ஸ் பெட்டிகள் அனைத்தும் மாயமானது தெரியவந்ததாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, சோழவந்தான் காவல் நிலைய அதிகாரி புகாரை வாங்க மறுத்ததாகவும் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
மேற்படி தொழிலதிபர் தன்னுடைய மனுவில் 770 ஹார்லிக்ஸ் பெட்டிகள் திருடுபோயிருப்பதாக தெரிவித்து இருக்கிறார். பொதுவாக ஒரு பெட்டியில் 12 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் இருக்கும். அப்படி என்றால் 770 பெட்டிகளில் 9,240 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் இருந்திருக்கும்.
அதாவது, 9,240 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருடப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட போது, அந்தப் புகாரை வாங்க சோழவந்தான் காவல்நிலைய ஆய்வாளர் மறுத்து இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரண்டு மணி நேரத்திற்குள் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. சிறிது நாட்கள் கழித்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடந்த சம்பவத்துக்காக காவல்துறை ஆய்வாளர் வருத்தம் தெரிவித்ததோடு, இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.
மேலும் இந்த வழக்கை திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு மாற்றி உத்தரவிட்டதோடு, இந்த வழக்கை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விசாரிக்க, திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணையின் அறிக்கை இரண்டு மாதத்திற்குள் உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்து இருக்கிறது. காவல்துறை ஆய்வாளர் புகாரை வாங்க மறுத்ததற்கான பின்னணி என்ன? எனது தொகுதியான ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் 18ஆம் தேதி கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு 8,700 நபர்களுக்கு, கருணாநிதின் மகனான மு.க.அழகிரி உதவிகள் வழங்கப் போவதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. அழகிரியை வரவேற்று திமுக சார்பில் விளம்பரமும் செய்யப்பட்டது.
மேற்படி நிகழ்ச்சிக்கு வந்த அழகிரி, 8,700 நபர்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்களை வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியையும், ஹார்லிக்ஸ் பெட்டிகள் திருடு போனது குறித்து கொடுக்கப்பட்ட புகாரை சோழவந்தான் காவல்நிலைய ஆய்வாளர் வாங்க மறுத்ததையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, அழகிரியின் உத்தரவின் பேரில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருடப்பட்டிருக்குமோ என்ற எண்ணமும், அவ்வாறு திருடப்பட்ட ஹார்லிக்ஸ் பாட்டில்கள் 18ஆம் தேதி நடைபெற்ற விழாவில் அழகிரியால் ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான அழகிரிக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளதால், இதனை மத்திய புலனாய்வு துறை விசாரிக்க உத்தரவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்டுவதோடு, அறவிழி மீறி மக்களைத் துன்புறுத்தும் திமுக அரசு வீழும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் தெரித்துக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




