இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நரேஷ்குப்தா ஓய்வு - தலைமை தேர்தல் ஆணையராக பிரவீன்குமார் நியமனம்!

E-mail அச்செடுக்க
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நாளையுடன் ஓய்வு பெறுவதை அடுத்து தமிழகத் தலைமை தேர்தல் ஆணையராக பிரவீன்குமார் நியமிக்கப்படவுள்ளார்.

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக நரேஷ்குப்தா இருந்து வருகிறார். கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அவர் கடந்த 5-2-2005-ல் இருந்து இப்பதவியை வகித்து வருகிறார். வரும் 31ஆம் தேதியுடன் நரேஷ்குப்தா பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த நரேஷ்குப்தா, தமிழக அரசில் பொதுப்பணித்துறை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். 1991-1996 அ.தி.மு.க ஆட்சி காலத்தின் போதும், இரண்டரை ஆண்டுகள், தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்துள்ளார்.

நேர்மையான அதிகாரி என்று அறியப்படும் பிரவீன்குமார் தற்போது, தமிழக நிதித்துறையில் செயலாளராக (செலவினம்) பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அசாரிபாக் (முன்பு பீகார்) ஆகும். இவர், 1987ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். இவர், தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக இன்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1961ஆம் ஆண்டில் பிறந்த அவர், கான்பூர் ஐ.ஐ.டி.யில் உலோகவியலில் பி.டெக், எம்.டெக் பட்டம் பெற்றுள்ளார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் எம்.பில். பட்டமும் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றபின், முதலில், 1988-ல் சேலத்தில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். 1989ஆம் ஆண்டில் தஞ்சையில் சப்-கலெக்டராகவும், 1989ஆம் ஆண்டில் செட்டில்மென்ட் அதிகாரியாகவும், 1991ஆம் ஆண்டில் தஞ்சை கூடுதல் கலெக்டராகவும், 1996-97-ஆம் ஆண்டில் விழுப்புரம் கலெக்டராகவும் பணிபுரிந்தார்.

1997ஆம் ஆண்டில் தொழில்துறை கூடுதல் செயலாளராகவும், 2000ஆம் ஆண்டில் நிதித்துறையில் கூடுதல் செயலாளராகவும் பணிபுரிந்தார் பிரவீன் குமார். பின்னர், 2001ஆம் ஆண்டில் டெல்லியில் மத்திய அரசு பணிக்குச் சென்ற அவர் அங்கு கல்வித்துறை இயக்குனராகவும், கம்பெனி விவகாரத்துறையில் இயக்குனராகவும் பணிபுரிந்தார். 2001 முதல் 2007 வரை மத்திய அரசு பணியில் இருந்த அவர், தமிழகம் திரும்பி, நிதித்துறையில் சிறப்பு செயலாளராக இருந்தார். தற்போது, நிதித்துறையில் செயலாளராக (செலவினம்) இருந்து வருகிறார்.

இவரது மனைவி அனிதா பிரவீன். இவரும், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கணவர் பணிபுரியும் நிதித்துறையிலேயே செயலாளராக (திட்டம் மற்றும் வளர்ச்சி) பணிபுரிந்து வருகிறார். பீகார் மாநிலம் பாட்னா இவரது சொந்த ஊராகும். 1989ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அனிதா பிரவீன் பணியில் சேர்ந்தார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்