இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

E-mail அச்செடுக்க

ம.தி.மு.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் மாநிலக் கட்சிகளின் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா, தேர்தல் கமிஷனர்கள் எஸ்.ஒய்.குரேஷி, வி.எஸ்.சம்பத் ஆகியோர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 

தமிழ்நாட்டில், ம.தி.மு.க., அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆகும். அதற்கு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) ஆணையின்படி, `பம்பரம்' சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்தல் சின்னங்கள் ஆணையின் 6ஏ மற்றும் 6சி விதிகளின் படியே, ஒரு கட்சியின் அங்கீகாரம் நீடிப்பது முடிவு செய்யப்படுகிறது.

கடைசியாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர்கள், செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெறுவதுடன், 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடைசியாக நடந்த பாராளுமன்ற தேர்தலில், செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெறுவதுடன், ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, சட்டசபை தேர்தலில், மொத்த தொகுதிகளில் 3 சதவீத தொகுதிகளிலோ அல்லது 3 தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, பாராளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி வீதம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இந்த விதிமுறைப்படி, ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும், ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டுகள், தேர்தல் கமிஷனால் ஆய்வு செய்யப்படுகின்றன. அதன்படி, ம.தி.மு.க. பெற்ற ஓட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன.

அக்கட்சி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் 3.67 சதவீத ஓட்டுகள் பெற்றதுடன், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலில் 5.98 சதவீத ஓட்டுகள் பெற்றதுடன், 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், அக்கட்சி, தனது அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை.

எனவே, ம.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ஏன் வாபஸ் பெறக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்தது. அதற்கு அக்கட்சி எழுத்து மூலம் அளித்த பதிலில், சட்டசபை தேர்தலில் பெற்ற 5.98 சதவீத ஓட்டுகளை 6 சதவீதமாக `ரவுண்ட்' செய்து, அங்கீகாரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

மேலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்தது. அவரும், அக்கட்சி ஏற்கனவே அளித்த வாதங்களை முன்வைத்தார். ஆனால், அவை ஏற்புக்குரியதாக இல்லை.

எனவே, ம.தி.மு.க.வின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், அக்கட்சி பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சியாக நீடிக்கும். அதற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட `பம்பரம்' சின்னம், 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

பா.ம.க., தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி ஆகும். அக்கட்சிக்கு `மாம்பழம்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 34.29 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது. எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 3.80 சதவீத ஓட்டுகள் பெற்று, 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, புதுச்சேரியில் அக்கட்சி மாநில கட்சியாக நீடிப்பதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை.

எனவே, புதுச்சேரி மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க பா.ம.க.வுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அதன்படி, எழுத்து மூலம் விளக்கம் அளித்தது. பிறகு, கடந்த 19-ந் தேதி, பா.ம.க.வை சேர்ந்த ஆர்.வேலு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், இரண்டாம் இடத்தை பெற்றதாகவும், சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் அவர் எடுத்துரைத்தார். புதுச்சேரியில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி இருப்பதால், `ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற வேண்டும்' என்ற தேர்தல் சின்ன ஆணை, அங்கு பொருந்தாது என்றும் அவர் கூறினார்.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் தேர்தல் சின்ன ஆணை விதிமுறைகளை பா.ம.க. பூர்த்தி செய்யவில்லை. ஆகவே, புதுச்சேரியில் பா.ம.க.வின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், அக்கட்சி `மாம்பழம்' சின்னத்தை பயன்படுத்தி கொள்ளலாம். தமிழ்நாட்டில், பா.ம.க. வழக்கம் போல் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக நீடிக்கும்.

லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதளம், பீகார், ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில், தேசிய கட்சி அங்கீகாரம் பெற்றிருந்தது. ஆனால், கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், பீகார், ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் அக்கட்சி பெற்ற ஓட்டுகள், தேசிய கட்சியாக நீடிப்பதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை.

ஆகவே, ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. அக்கட்சி, பீகார், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக செயல்படும். அதன் `லாந்தர் விளக்கு' சின்னம் நீடிக்கும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல், சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதாதளம், அருணாசல காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய கட்சிக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு, அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றில் பிரசாரம் செய்தல், வாக்காளர் பட்டியலை இலவசமாக பெறுதல் போன்ற சலுகைகளை, அங்கீகாரம் ரத்தான கட்சிகள் இழக்கின்றன.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்