திருச்சியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் 14ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரச்சினைக்காக, வருகிற 24ஆம் தேதி திருச்சியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ஆர்ப்பாட்டம் 24ஆம் தேதிக்கு பதிலாக, முன்னதாக 14ஆம் தேதியே நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
விவசாயிகளை விரக்தியின் விளிம்பிற்கு தள்ளி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி, மணல் கொள்ளை மூலம் நீராதாரத்தை நிர்மூலமாக்கி, அனைத்து தரப்பு மக்களையும் விலைவாசி உயர்வு என்னும் கொடிய அரக்கனிடம் சிக்க வைத்துள்ள தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில், பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் 24ஆம் தேதி அன்று திருச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், ஆகஸ்டு 14ஆந் தேதி (சனிக்கிழமை) நண்பகல் 12 மணி அளவில் திருச்சி மாநகரில் நடைபெறும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




